“அந்த அளவுக்கு ஒரு வெட்கமில்லாத எதிர்க்கட்சி…” – அதிமுக மீது உதயநிதி விமர்சனம்

சென்னை: “நான் சட்டமன்றத்தில் பேசியபோது, கமலாலயத்திற்கு மட்டும் போகாதீர்கள் என்று நான் அப்பவே கூறினேன். அப்போது அண்ணன் ஓபிஎஸ், எந்தக் காலத்திலும் எங்களது கார் அங்கு போகாது என்றார். ஆனால், நேற்று காலையில் இரண்டு பேரும் போட்டிப் போட்டிக் கொண்டு கமலாலயம் சென்று இரண்டு மணி காத்திருக்கின்றனர்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொசப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் திமுக எம்பி கனிமொழி மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.6.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக நலக்கூட்டத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை திறந்துவைத்தார். மேலும் சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 9 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்துப் பேசிய அவர், “திருமணமான புதுமண தம்பதிகள் எப்படி வாழக் கூடாது என்று நான் சொல்கிறேன். தயவுசெய்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாதிரி வாழ்ந்துவிடாதீர்கள். உங்களுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்.

சென்னை எழும்பூர் பகுதியில் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்ட சமூக நலக்கூடம்

நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பேசியபோதுகூட, அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களே, அண்ணன் ஓபிஎஸ் அவர்களே, நீங்கள் இரண்டுபேரும் தவறுதலாக என்னுடைய காரில் ஏற சென்றுவிட்டீர்கள். என்னோட கார்தான் தாராளமாக எடுத்துச் செல்லுங்கள். நான் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டேன். ஆனால், கமலாலயத்திற்கு மட்டும் போகாதீர்கள் என்று நான் அப்பவே கூறினேன்.

அப்போது அண்ணன் ஓபிஎஸ் எழுந்து சொன்னார், எந்த காலத்திலும் எங்களது கார் அங்கு போகாது என்றார். ஆனால், நேற்று காலையில் இரண்டு பேரும் போட்டிப்போட்டிக் கொண்டு கமலாலயம் சென்று இரண்டு மணி காத்திருக்கின்றனர். அந்தளவுக்கு ஒரு வெட்கமில்லாத எதிர்க்கட்சியாக, இதற்கு மேல் நான் அவர்களை பேச விரும்பவில்லை” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.