மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்: திரிபுராவில் அதிகபட்சம்; உ.பி.யில் குறைவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்.26) நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக திரிபுராவில் 78.53 சதவீதம், மணிப்பூரில் 77.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தவிர, கேரளாவில் 65.78 சதவீதம், கர்நாடகா 68.26 சதவீதம், அசாம் 71.11 சதவீதம், பிஹார் 55.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேநேரம் குறைந்த பட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85 சதவீதம், மகாராஷ்டிரா 56.63 சதவீதம், மத்திய பிரதேசம் 57.76 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 73.55 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 71.91 சதவீதம், ராஜஸ்தான் 64.07 சதவீதம், மேற்கு வங்கம் 71.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மணிப்பூரில் வன்முறை: மணிப்பூரில் உள்ள உக்ரூல் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது இரண்டு வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் நிகழ்ந்தன. வாக்குச் சாவடிகளில் புகுந்த வன்முறையாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள், மேசை மற்றும் நாற்காலிகளை சூறையாடினர்.

இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதியில் உள்ள தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் கூறி அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டபோது வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. வாக்குச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டு மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

முன்னதாக, கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தல் களத்தில் 1202 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 1098 பேர் ஆண்கள், 102 பேர் பெண்கள், இருவர் மாற்று பாலினத்தவர். இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 3.28 கோடி பேர் 20 முதல் 29 வயது வரையிலான இளம் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.