கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் ‘வகிர்’ சேர்ப்பு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மும்பை: இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் ‘வகிர்’ திங்கள்கிழமை கடற்படையில் சேர்க்கப்பட்டது.

ஐஎன்எஸ் ‘வகிர்’ பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மஸகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விழாவில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் கடற்படையில் வகிர் இணைக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்த நீர்மூழ்கி கப்பல், இந்தியாவின் கடல்சார் நலன்களை மேம்படுத்துவது, எதிரிகளைத் தடுப்பது, புலனாய்வு செய்வது, நெருக்கடி காலங்களில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் இந்திய கடற்படையின் ஆற்றலை வலுப்படுத்தும்.

வகிர் என்பதற்கு மணல் சுறா என்று பொருள். இது ரகசியமான செயல்பாடு மற்றும் அச்சமின்மையைக் குறிக்கும். இந்த இரண்டு அம்சங்களும் வகிர் கப்பலுக்கும் அப்படியே பொருந்தும்.

உலகின் சிறந்த சென்சார்கள் நீர்முழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுதங்களில் கம்பிவழி துண்டப்படும் டோர்பிட்டோக்கள், பெரிய எதிரி படையை நிர்மூலமாக்கும் அளவில் நீர்பரப்பில் இருந்து நிலத்திற்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அதேபோல் சிறப்பு செயல்பாடுகளுக்கான கடற்படை கமாண்டோக்களையும் இந்த நீர்மூழ்கி கப்பல் கொண்டுள்ளது. அதேநேரத்தில், இதன் சக்தி வாய்ந்த டீசல் எஞ்சின் மூலம் ரகசிய செயல்பாடுகளுக்காக பேட்டரிகளை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஐஎன்எஸ் வகிர் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல்- மின்சாரத்தில் இயங்கும். எதிரி போர்க் கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான் பகுதி, நிலப்பகுதிகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.

இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கியிருக்க முடியும். இது அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகளின் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது.

இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா, ஜெர்மனி தயாரிப்புகள்.

இந்தs சூழலில் கடந்த 2005-ம்ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த 2007-ம்ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது. முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐஎன்எஸ் காந்தேரி, 2021-ம்ஆண்டில் ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வகிர் இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்கள், கல்வாரி ரகம் என்றழைக்கப்படுகிறது. கல்வாரி என்ற மலையாள சொல் புலிச்சுறாவை குறிக்கிறது. இதுவரை 4 கல்வாரி ரக நீர்மூழ்கிகள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. கல்வாரி ரகத்தில் இறுதி மற்றும் 6-வது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வக்சிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் கடற்படையில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.