'நேதாஜியின் கனவை நிறைவேற்றுவோம்!' – மோகன் பாகவத் பேச்சு!

நேதாஜியின் கனவை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவோம் என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்து உள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 ஆவது ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, நாட்டின் உயரிய பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டியுள்ளார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஷாகித் மினார் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார்.

பேரணியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

நாட்டுக்கான அவரது தியாகத்தினால் இந்தியர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால், அவரது கனவை இந்தியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற மொத்த விருப்பங்களையும் அவர் வழங்கி இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுக்க நேதாஜியின் மகள் அனிதா போஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்ற நேதாஜியின் போதனையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் பிரதிபலிக்கவில்லை. நேதாஜி பக்தியான இந்துவாக இருந்த போதும், பிற மதங்களை மதிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கு அவர் ஆதரவாக இருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் இந்த அணுகுமுறையை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இரு தரப்பிலும் ஒரு எளிய முத்திரையை வைக்க விரும்பினால், அவர்கள் வலதுசாரிகள்; நேதாஜி ஒரு இடதுசாரி” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.