"பி.வி.சிந்துவிற்காக சென்னை தயிர்சாதம்; சாய்னாவுக்கு இத்தாலி பாஸ்தா" -சுவாரஸ்யம் பகிரும் செஃப்

இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் ஜனவரி 17 முதல் 22 வரை டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் உள்ள கேடி ஜாதவ் இன்டோர் ஹாலில் ‘2023 இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன்’ தொடரை நடத்தியது.

இந்தியா, தாய்லாந்து, கனடா, மலேசியா, இந்தோனேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் கலந்துகொண்டனர்.

போட்டியில் வென்றவர்கள்

இந்நிலையில் இந்தத் தொடரில் பங்குபெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து வழங்கும் ஒப்பந்தம் பிரபல கேட்டரிங் நிறுவனத்தின் உரிமையாளரான மன்விர் சிங் ஆனந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவரின் கேட்டரிங் நிறுவனம் ஏற்கெனவே பல உலகளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கும் குறிப்பாக ஐபிஎல், இந்திய கால்பந்து சூப்பர் லீக், உலகளவிலான குத்துச் சண்டை போட்டிகள் போன்றவற்றிற்கு கேட்டரிங் செய்து பெயர்பெற்றது. மேலும், கேட்டரிங் தொடர்பாக மன்விரின் ‘Catering Your Way to Financial Independence’ எனும் புத்தகம் பெரிதும் பேசப்பட்டது.

அந்தவகையில் நடந்து முடிந்த இந்த ‘2023 இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன்’ தொடரில் பங்குபெற்ற மேற்கு ஐரோப்பிய முதல் கிழக்கு ஆசியா வரையிலுமான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த பலவிதமான உணவுகள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து வழங்கியது மன்விர் சிங் ஆனந்தின் கேட்டரிங் நிறுவனம்.

இப்பணியை முன் நின்று நடத்திய மன்விர் சிங் ஆனந்த் உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீரர்கள் எடுத்துக் கொண்ட உணவுகள் பற்றியும், அதனை தயார் செய்த அனுபவம் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

மன்விர் சிங் ஆனந்த்

இதுபற்றி பேசிய அவர், “எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, நாங்கள் உணவிற்கான மெனுவைக் கவனமாக தயார் செய்து பறிமாறினோம். விளையாட்டு வீரர்களுக்குப் பரிச்சையமான, அவர்களுக்குப் பிடித்தமான சுவைக்கேற்ப ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவர்களுக்கு பிரத்யேகமான முறையில் செய்து வழங்கினோம். உலகம் முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்ட சிறந்த பொருட்களைக் கொண்டு அதைச் செய்தோம். அதனால் வீரர்கள் உணவை சிறந்த முறையில் எடுத்துக் கொண்டனர்.

சோபா நூடுல்ஸ் பெரும்பாலான வீரர்களுக்குப் பிடித்த உணவாக இருந்தது. பிளாக் டீ, பிளாக் காபி கூட பிரத்யேகமாகச் செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப, அதேசமயம் ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும். இது மிகவும் சவாலான பணியாக இருந்தது” என்றார்.

பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால்

இதையடுத்து பிவி சிந்து மற்றும் சாய்னா நேவாலுக்கு வழங்கப்பட்ட உணவு முறைகள் பற்றி பேசிய அவர், “பிவி சிந்துவின் குழுவினர் துல்லியமான முறையில் அளவான கடுகுகளுடன் கூடிய மிதமான சூட்டுடன் தயார் செய்யப்பட்ட தயிர் சாதத்தை விரும்புவார்கள். சிந்துவிற்காக பிரத்யேகமாகச் சென்னையிலிருந்து செஃப்பையே வரவழைத்தோம். சிந்துவின் குழுவினர் அவர்களின் அறையில் இருக்கும் தண்ணீர்கூட குறிப்பிட்ட மிதமான வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

அதேபோல உணவில் சக்கரையைத் தவிர்ப்பார்கள். சாய்னா நேவால் பிரச்னை இல்லாதாவர். அவருக்கு சாண்ட்விச் மற்றும் காரம் இல்லாத ‘Aglio E Olio’ வகையிலான சாதாரன பாஸ்தாவை விரும்புவார் அவ்வளவுதான். அவருக்காக இத்தாலியிலிருந்து பாஸ்தா வரவழைக்கப்பட்டது. ஒரு சில வீரர்கள் கிச்சடியை மட்டுமே விரும்புவார்கள். கிரிக்கெட் வீரர்களைப் போல எந்த வம்பும் இல்லாதவர்கள் பேட்மிண்டன் வீரர்கள். எனவே அவர்களுக்கு உணவை சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறினார் மன்விர் சிங் ஆனந்த்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.