ஈபிஎஸ்க்கு ரெண்டே சாய்ஸ்… நெருக்கும் பாஜக- ஈரோட்டில் எழுதப்படும் அதிமுக எதிர்காலம்!

வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த பக்கம் ரூட் கிளியர். எதிர்தரப்பில் அதிமுகவின் நிலை தான் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. ஏனெனில் உட்கட்சி பூசலில் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வரும்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
என இருவருமே போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

பாஜகவிடம் ஆதரவு

தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று நேரில் ஆதரவு திரட்டினர். ஆனால் பாஜக தரப்போ யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நேரடியாக போட்டியிடுவது பற்றியும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இன்னும் காலம் இருக்கிறது. பொறுமையாக யோசிப்போம்.

சிக்கலில் இரட்டை இலை

கூட்டணி ஜெயிக்க அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்த தயாராக உள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மழுப்பலாக பதிலளித்துள்ளார். அதிமுக தரப்பில் இருதரப்புமே போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் உண்டாகும். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஏ மற்றும் பி படிவத்தில் கட்சியில் அதிகாரம் படைத்த நபர் கையெழுத்திட்டால் மட்டும் அதிகாரப்பூர்வ சின்னம் ஒதுக்கப்படும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

அந்த வகையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு பதவிகளும் இன்னும் அமலில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. சமீபத்தில் அக்கட்சிக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மூலம் இதனை புரிந்து கொள்ளலாம். அப்படியெனில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிறுத்தப்படும் அதிமுக வேட்பாளருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே கையெழுத்திட வேண்டும்.

சுயேட்சையாக போட்டி

ஓபிஎஸ் கூட உடன்படுவதற்கு தயாராக உள்ளார். ஆனால் அதை பெறுவதற்கு ஈபிஎஸ் தயாராக இல்லை. இதனால் சின்னம் விஷயத்தில் கட்சிக்குள் மோதல் போக்கு ஏற்பட்டு இறுதியில் முடக்கப்படும் என்றே சொல்லப்படுகிறது. அதன்பிறகு தேர்தல் ஆணையம் அளிக்கும் தனி சின்னத்தில் சுயேட்சையாக களமிறங்க நேரிடும். இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்கு சேகரிப்பில் பெரிதாக எடுபடாது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இரண்டு சான்ஸ்

பாஜகவும் ஆரம்பம் முதலே ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும். சமாதான பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று தான் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் எடப்பாடி பெரிதும் முரண்டு பிடித்து வருகிறார். இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டும் இருப்பதாக தெரிகிறது. ஒன்று, ஓபிஎஸ் உடன் இணக்கமாக போவது.

ஈகோ அரசியல்

அப்படி நடந்தால் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும். கட்சிக்காக இருவரும் ஈகோ அரசியலை விட்டு கொடுத்து கைகோர்த்து நிற்கிறார்கள் என்ற இமேஜ் உருவாகும். வெற்றி பாதையை நோக்கி நடைபோட உறுதுணையாக இருக்கும் என்கின்றனர். இரண்டாவது, ஓபிஎஸ் மற்றும் பாஜகவை கண்டுகொள்ளாமல் சுயேட்சை சின்னத்தில் நிற்பது.

கூட்டணி விரிசல்

இதனால் பாஜகவை பகைத்து கொள்வது போல் ஆகிவிடும். அது வரும் 2024 மக்களவை தேர்தல் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஊழல் வழக்குகள் முதல் கட்சி விவகாரம் வரை டெல்லி கடுமையாக குடைச்சல் கொடுக்கும். எனவே எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப் போகிறார்? அதற்கு பாஜக ஆற்றப் போகும் வினை என்ன? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.