கல் எறிந்த அமைச்சரை பதவியில் இருந்து எறிவாரா முதல்வர்..?

திருவள்ளூர் அருகே முதல்வர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் நாசர் நாற்காலி எடுத்து வர தாமதமானதால் ஆத்திரமடைந்து திமுக தொண்டர்கள் மீது கல்லை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு திமுக அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் தன்னிலை மறந்து ஆணவத்துடன் நடந்துகொள்கின்றனர். அந்த வகையில், அமைச்சர் பொன்முடி, கே.என். நேரு ஆகியோரின் வரிசையில் தற்போது அமைச்சர் நாசரும் இணைந்துள்ளார்.

திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சியை பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர நாற்காலி எடுத்து வர சொன்னதாக தெரிகிறது. இந்நிலையில், திமுகவினர் அமைச்சருக்கு மட்டும் நாற்காலியை எடுத்து வராமல் உடன் இருந்தவர்களுக்கும் சேர்த்து சில நாற்காலிகளை கொண்டு வந்தனர்.

அதற்கு கால தாமதம் ஆனதால், ” ஒரு சேர் எடுத்து வா… போடா” என்று அதட்டி தரையில் இருந்த கல்லை எடுத்து எறிந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் கூட அமைச்சர்கள் இவ்வாறு கடினமாக நடந்துகொள்ளவில்லை ஆனால் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே ஆட்சியாளர்கள் மக்களை மதிப்பதே இல்லை என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே, திமுக அமைச்சர்களையம், நிர்வாகிகளையும் முதல்வர் ஸ்டாலின் கெஞ்சாத குறையாக அறிவுறுத்தி இருந்தார். அமைச்சர்கள் செய்யும் செயல்கள் தனது தூக்கத்தை கெடுப்பதாக முதல்வர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், அதுகூட அமைச்சர்களை கட்டுப்படுத்துவதற்காகவா இல்லை மக்களை ஆறுதல் படுத்தவா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு திமுக அமைச்சர்கள் நடந்து கொள்கின்றனர்.

தான் உட்கார வேறொருவர் நாற்காலியை சுமப்பதையே பெரிதாக கருதாமல் கால தாமதம் ஆனதாகக்கூறி கல்லை எடுத்து பிறர் மீது எறிந்த அமைச்சர் நாசரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. வழக்கமாக இதற்கும் மன்னிப்பு கேட்டு கடந்து செல்வார்கள் இவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.