டெல்லி மேயர் யார்? இன்னிக்கு பெரிய சம்பவம்; முட்டி மோதும் ஆம் ஆத்மி, பாஜக!

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104,
காங்கிரஸ்
9, சுயேட்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். முதல்முறை ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மை பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மேயர் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் கூடியது.

டெல்லி மாநகராட்சி கூட்டம்

முதலில் உறுப்பினர்கள் பதவியேற்பு, அதன்பிறகு மேயர், துணை மேயர் தேர்வு, இறுதியாக 6 பேர் கொண்ட நிலைக்குழு ஆகியோரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மேயர் தேர்வில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்த போதிலும், பாஜகவும் தன்னுடைய தரப்பில் வேட்பாளரை நிறுத்தி அதிர்ச்சியூட்டியது. இதனால் கடைசி நேர தில்லுமுல்லு நடைபெற்று மேயர் பதவியானது ஆம் ஆத்மிக்கு கை நழுவி போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

மேயர் பதவிக்கான தேர்தல்

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி சார்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய், அஷு தாகூர் ஆகியோர் மேயர் பதவிக்கு போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் ரேகா குப்தா மேயர் பதவிக்கான ரேஸில் களமிறக்கப்பட்டுள்ளார். துணை மேயருக்கான போட்டியில் ஆம் ஆத்மி சார்பில் ஆலே முகமது இக்பால் மற்றும் ஜலாஜ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி, பாஜக மோதல்

பாஜக தரப்பில் கமல் பாக்ரி நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சூழலில் மாநகராட்சி கூட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் என இவர்களில் யார் முதலில் பதவியேற்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி, பாஜக இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றது. இதையடுத்து மேயரை தேர்வு செய்யாமலே கடந்த 6ஆம் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் சண்டை

இந்நிலையில் டெல்லி மாநகராட்சி கூட்டம் இன்று (ஜனவரி 24) மீண்டும் கூடுகிறது. இன்றாவது மேயர் தேர்வு செய்யப்படுவாரா? இல்லை கலகம் வெடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா, மாநகராட்சி கூட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதற்கே பாஜக விரும்புகிறது.

பாஜக கேள்வி

தற்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது நியமன உறுப்பினர்கள் இவர்களில் யார் முதலில் பதவியேற்க வேண்டும் என்பதில் அவைத் தலைவர் தான் தீர்மானம் செய்ய வேண்டும். அதேசமயம் ஆம் ஆத்மி கட்சிக்கு தான் பெரும்பான்மை இருக்கிறதே? அப்புறம் எதற்காக இப்படி பதவியேற்பில் பிரச்சினை செய்கிறார்கள்? இந்த விஷயம் புரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.