இன்று 74வது குடியரசு தின விழா டெல்லியில் பலத்த பாதுகாப்பு: பதவியேற்ற பின் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார் முர்மு

புதுடெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியில் கடமைப்பாதையில் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியேற்றுகிறார். அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

இது, மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவ படைப்பிரிவும் கலந்து கொள்கிறது. வரலாற்று சிறப்புமிக்க கடமைப் பாதையில் கலை நிகழ்ச்சிகளும், வீரதீர செயல்களும், ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகளும் நடைபெற உள்ளது. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்று கொள்கிறார். காலை 10.30 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின விழா நிறைவடைகிறது. விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து கடமைப்பாதை வழியாக ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளது.

மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன டிரோன்கள், ரபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப் படை சாகசமும் நடைபெற உள்ளது. கடமைப்பாதையில் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார அணிவகுப்பு, குழந்தைகளின் கலாசார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன. பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வரவுள்ளன.

 நாட்டின் வளமான கலாசார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணுவ டாட்டு மற்றும் பழங்குடியினர் நடனம், வீரக்கதைகள் 2.0, வந்தே பாரதம் நடனப்போட்டி 2.0, தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ நிகழ்ச்சிகள் மற்றும் கடலோர காவல்படையின் இசை நிகழ்ச்சி, அகில இந்திய அளவிலான பள்ளி இசை நிகழ்ச்சி போட்டி, டிரோன் காட்சி உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.