ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து சேலத்தில் இபிஎஸ், சென்னையில் ஓபிஎஸ் ஆலோசனை

சேலம் / சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் சேலத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதேபோன்று சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்தும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற தேவையான வியூகம் அமைத்து பணியாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், வளர்மதி, கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, சம்பத், கருப்பணன், இசக்கி சுப்பையா, சேலம் புறநகர் மாவட்டஅதிமுக செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

இதேபோன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார். வேட்பாளர் தேர்வு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் செங்குந்த முதலியார் சமூகத்தினர் அதிகளவில் இருப்பதால், அச்சமூகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்க ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நேற்று புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை, சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று ஓபிஎஸ் சந்தித்து ஆதரவுகோரினார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

பிரதமரின் விருப்பம்

அதிமுகவில் பிரிந்துள்ள அத்தனை பிரிவுகளும் ஒன்று சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடு ஆகும். எங்களின் நிலைப்பாடும் அதுதான். அதிமுக அனைத்து அணிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே பிரதமரின்விருப்பமும் ஆகும். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.