ஈரோட்டில் எடப்பாடி ஆடும் சடுகுடு: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க முயற்சி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில்
எடப்பாடி பழனிசாமி
தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சேலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை சந்தித்து வரும் அவர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இது குறித்து சேலம், ஈரோடு வட்டாரங்களில் விசாரிக்கும் போது முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

“ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதை அதிமுக தவிர்த்திருக்க முடியும். ஏற்கெனவே அதன் கூட்டணியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த தமாகாவிடம் இம்முறையும் வாய்ப்பை கொடுத்துவிட்டு பல பிரச்சினைகளை எடப்பாடி பழனிசாமி தவிர்த்திருக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படி செய்யவில்லை. மாறாக தாமாக முன்வந்து ஜிகே வாசனிடம் பேசி போட்டியிடும் வாய்ப்பை அதிமுகவுக்கு பெற்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை முடிவடையாத நிலையில் ஓபிஎஸ்ஸும் இரட்டை இலைக்கு உரிமை கோரினால் சின்னம் முடக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. இருந்த போதும் எடப்பாடி பழனிசாமி மோதிப் பார்த்துவிடலாம் என்ற முடிவை எடுத்தார். இதனால் ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

கட்சி நிர்வாகிகளின் ஆதரவு பெருமளவில் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் பாஜகவை துணைக்கு அழைத்தார் ஓபிஎஸ். பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்பதாகவும் கூறியதால் உள்ளுக்குள் ஓபிஎஸ்ஸுக்கு பயம் இருப்பதும் வெட்ட வெளிச்சமானது.

பாஜகவை பொறுத்தவரை யாரை ஆதரிப்பது என்பது என்ற குழப்பம் இன்னும் விலகவில்லை. வேட்பாளரை அறிவிக்கும் முன்னர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துவிடும். தீர்ப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான அம்சங்கள் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமும் சேர்ந்து கொண்டுள்ளது. அதனாலே அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தான் பெரிய கட்சி என்பதை திரும்ப திரும்ப கூறிவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்ததில் பொதுக்குழு வழக்கில் தங்கள் தரப்புக்கு சாதகமாக வரும் என்றே உறுதியாக நம்புகிறார். அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் களப் பணிகளை முடித்துவிடலாம். பூத் வாரியாக நிர்வாகிகளை அலர்ட் செய்து, சிறப்பு கவனிப்பு கொடுத்து தொகுதியை வலம் வர உத்தரவிட்டுள்ளார். எனவே முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது.

தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகளைப் பெறலாம் என்று கணக்கு போடப்பட்டுள்ளது. பாமக தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அந்த வாக்குகள் அதிமுகவுக்கே வரும் என்றும் நம்புகிறாராம்.

திட்டமிட்டபடி இவை நடந்து முடிந்தால் ஓபிஎஸ், சசிகலா என இரு தரப்புக்கும் அதிகாரபூர்வமாக என்ட் கார்டு போட்டுவிடலாம். அதன் பின்னர் அடுத்த ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலில் நம் கையே ஓங்கும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம். இதற்காகவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலை அவர் மிக கவனமாக எதிர்கொள்கிறார்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.