மத்திய பட்ஜெட் 2023ல் என்னென்ன சர்ப்ரைஸ்? பெருசா கணக்கு போடும் கர்நாடகா!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்னதாக பிப்ரவரி ஒன்றாம் தேதி 2023-24ஆம் நிதியாண்டிற்கான
மத்திய பட்ஜெட்
தாக்கல் செய்யப்படவுள்ளது. கர்நாடக மாநில முதல்வரும், நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை ஏற்கனவே மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்த பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி வைத்துள்ளார். நிச்சயம் நல்ல திட்டங்கள் வரும் என்று காத்திருக்கிறார்.

சிறப்பு திட்ட அறிவிப்புகள்

அதுமட்டுமின்றி மத்திய அரசு, மாநில அரசு ஆகியவை கைகோர்த்து டபுள் எஞ்சின் முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதேபோல் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டும் வகையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி, கர்நாடக மாநிலத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கும் வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.

FinTech City திட்டம்

குறிப்பாக வர்த்தக ரீதியில் மிகவும் முக்கியமான நகரமாக பெங்களூரு திகழ்கிறது. இதனை சுற்றி FinTech City என்ற வகையில் தொழில் நிறுவனங்கள் அடங்கிய துணை நகரங்கள் உருவாக்க திட்டம் அறிவிக்கப்படலாம். இந்த விஷயத்தில் மாநில அரசு பிரதிநிதிகளிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு FinTech City திட்ட அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சாட்டிலைட் டவுன்கள்

இந்த பட்டியலில் கர்நாடக மாநிலமும் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மாநில அரசிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. அதாவது, பெங்களூருவை சுற்றியுள்ள நீலமங்கலா, ஒஸ்கோடே, தொட்டபல்லாபூர் ஆகியவற்றை சாட்டிலைட் டவுன்களாக அறிவிக்க உள்ளது. இதற்கான நிதி விஷயத்தில் மத்திய அரசு கைகொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

புதிய ரயில் சேவை

மேலும் கர்நாடகாவின் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு புதிய ரயில் சேவை தேவைப்படுகிறது. பெங்களூரு – ஹூப்ளி இடையில் வந்தே பாரத் ரயில், பெங்களூரு – துமகுரு – மைசூரு இடையில் அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

மாநில பட்ஜெட்

இவ்வாறு மத்திய பட்ஜெட்டில் கர்நாடக மாநிலம் எதிர்பார்க்கும் திட்டங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. வரும் பிப்ரவரி 17ஆம் தேதி மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்ய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தயாராகி வருகிறார். அதில் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற விவசாயம், பாசனத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

கலசா – பந்துரி, மேகதாது, எட்டினாஹோலே, உபர் கிர்ஷ்ணா , நவாலி நீர்த்தேக்கம் ஆகிய நீர்வளத் திட்டங்கள் முன்னெடுப்பில் இருக்கின்றன. அதற்கான நிதி விஷயத்திலும் மத்திய அரசு கைகொடுக்க வேண்டும் என கர்நாடகா எதிர்பார்க்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.