பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார் : திரையுலகினர் இரங்கல்

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா(86) வயது மூப்பால் ஐதராபாத்தில் காலமானார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழிலும் ‛மிஸ்ஸியம்மா, குழந்தையும் தெய்வமும்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று(ஜன., 27) காலமானார். அவரது மறைவு தமிழ், தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜமுனாவின் வாழ்க்கை பயணம்
கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ் – கவுசல்யா தேவி ஆகியோருக்கு மகளாக 1936, ஆகஸ்ட் 30ல் பிறந்தவர் ஜமுனா. சிறு வயதிலேயே இவருடைய தந்தை ஆந்திர பிரதேசம் தெனாலிக்கு அருகிலுள்ள துக்கிரலா என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். பள்ளி நாட்களிலேயே பல மேடை நாடகங்களில் நடித்து வந்த ஜமுனாவிற்கு அவருடைய தாயார் உறுதுணையாகவும், ஊக்குவிப்பாளராகவும் இருந்தார்.

தெலுங்கில் பிரபலம்
இவர் நடித்த “மா பூமி” என்ற நாடகத்தை பார்த்த டாக்டர் கரிகபட்டி ராஜாராவ் தன்னுடைய படமான “புட்டில்லு” என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஜமுனாவிற்கு தந்தார். இதுவே ஜமுனா நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். ஆரம்ப காலங்களில் இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் இவருக்கு பெரிய அந்தஸ்தை தராவிட்டாலும் 1959ல் ஏ நாகேஸ்வரராவுடன் இவர் இணைந்து நடித்த “இல்லரிகம்” என்ற திரைப்படம் வெள்ளி விழா கண்டதுடன் இவரை தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அடையாளம் காண செய்தது. அதன் பின் தொடர்ந்து என்டிஆர் போன்ற முன்னணி கதாநாயகர்களோடு இணையாக நடித்து பிரபலமானார். ஏறக்குறைய 190 தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழிலும் அசத்தல்
தமிழில் சொற்ப எண்ணிக்கையுள்ள படங்களில் இவர் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் தமிழ் ரசிகர்கள் நெஞ்சம் நிறைந்தவைகளாக இன்றும் உள்ளது என்றே சொல்ல வேண்டும். “மிஸ்ஸியம்மா”, “தங்கமலை ரகசியம்”, “கடன் வாங்கி கல்யாணம்”, “நிச்சய தாம்பூலம்” மற்றும் “குழந்தையும் தெய்வமும்” போன்ற படங்களாலும் “அமுதை பொழியும் நிலவே”, “அன்புள்ள மான் விழியே”, “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா” போன்ற பாடல்களாலும் இன்றும் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகை ஜமுனா. எம்ஜிஆரோடு “தாய் மகளுக்கு கட்டிய தாலி” என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்த ஜமுனா அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமுந்திரி தொகுதியில் போட்டியில் லோக்சபா எம்பியாக 1989ல் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கல்லூரி பேராசிரியர் ஜுலுரி ரமணராவ் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஸ்ரவந்தி (மகள்) வம்சிகிருஷ்ணா (மகன்) உள்ளனர். 2014ல் இவரது கணவர் இறந்துவிட்டார்.

விருதுகள்
1968ல் சிறந்த துணை நடிகைக்கான “பிலிம் பேர் விருது” 'மிலன்' என்ற ஹிந்தி படத்திற்காக வழங்கப்பட்டது.
1972ல் “பிலிம் பேர் சிறப்பு விருது” 'பண்டன்டி கப்புரம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.
1999ல் தமிழக அரசின் கவுரவ “எம் ஜி ஆர் விருது” வழங்கப்பட்டது.
2008ல் “என்டிஆர் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.