அலட்சியமாக இடிக்கப்பட்ட கட்டடம்; பலியான பெண் மென் பொறியாளர்! – சோகத்தில் உசிலம்பட்டி மக்கள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டி முருகேசனின் மகள் பத்மபிரியா. இவர் சென்னையில் மென் பொறியாளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி அண்ணா சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இடிக்கப்பட்ட பழைய கட்டடத்தின் சுவர் விழுந்து பத்மபிரியா பலியானார்.

பட்டம் பெற்றபோது

அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு மசூதி அருகே பழைய கட்டடத்தை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருந்தனர். சாலையில் சென்றவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை. இதை கட்டட உரிமையாளர்களோ, இடிக்க ஒப்பந்தம் எடுத்தவர்களோ, மாநகராட்சி ஊழியர்களோ கண்காணிக்கவில்லை.

கதறி அழும் தந்தை

இடிக்கப்பட்ட கட்டடத்தின் ஒருபக்க சுவர் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது விழ, அங்கிருந்தவர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க மீட்புப்படையினர் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கோர விபத்தில் பத்மபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தன்னுடைய பெற்றோரிடம் விரைவில் ஊருக்கு வருவதாகச் சொல்லியிருந்த பத்மபிரியா, சிலரின் அலட்சியத்தால் பரிதாபமாக இறந்துபோனார்.

இந்தத் தகவல் கேள்விப்பட்டு அவரின் பெற்றோர், உறவினர்கள் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்றனர். தங்கள் மகளின் சாவுக்குக் காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்பு காவல்துறையினர் அவர்களை சமாதனப்படுத்தி, அவர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

பத்மபிரியா

அதையடுத்து, படமபிரியாவின் உடல் நேற்று இரவு உசிலம்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது. வீட்டில் கூடியிருந்த உறவினர்கள், பொதுமக்கள் பத்மபிரியாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் பத்மபிரியா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊர் பொதுமக்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு உசிலம்பட்டி மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் இளம்பெண் மரணம் குறித்துப் பேசும்போது, “எந்த பாதுகாப்புமின்றி கட்டடத்தை இடிக்கும்போது, உயிரிழந்த பத்மபிரியாவுக்கு உரிய இழப்பீட்டை இதுவரை தமிழக அரசு அறிவிக்கவில்லை.

ஊர்மக்கள் அஞ்சலி

தமிழக அரசு பத்மபிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி மீண்டும் இது போன்று உயிர்கள் பலியாவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.