பாகிஸ்தானில் மர்ம நோயால் 18 பேர் சாவு; தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷவாயு காரணமா?

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகரும், அந்த நாட்டின் மிகப்பெரிய நகருமான கராச்சியில் கெமாரி என்கிற கிராமம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகினர்.

இப்படி மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். அப்படி கடந்த 10-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரையில் 18 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் பெரும்பாலனோர் சிறுவர்கள் ஆவர். அதே போல் 3 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். காய்ச்சல், தொண்டை வீக்கம் மற்றும் மூச்சுத் திணறலால் அவர்கள் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சில ரசாயனங்களால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணங்கள் நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கிராமத்தில் உள்ள 2 தொழிற்சாலைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனவே தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறி அதன் விளைவாக மக்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.