ரூ3.60 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள்

குன்னூர்: நீலகிரி மலை ரயிலை ரூ.3.60 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய உள்ளூர் மட்டுமன்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் நீலகிரி மலை ரயிலுக்கு 3.60 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி நேற்று வாடகைக்கு எடுத்தனர்.

காலை 10 மணிக்கு கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இந்த மலை ரயில் புறப்பட்டது. இதில், 16 பேர் கொண்ட குழுவினர் மட்டுமே பயணம் செய்தனர். குகை, பாலம், வனவிலங்குகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தவாறு உற்சாகமாக பணம் செய்தனர். மதியம் 1.30 மணி அளவில் குன்னூர் வந்தடைந்தனர். குன்னூரில், பாரம்பரியமிக்க மலை ரயிலின் லோகோ பணி‌மனையை பார்வையிட்டு நூற்றாண்டு பழமை மிக்க நீராவி என்ஜின் இயக்கத்தை பற்றி கேட்டறிந்து, அதன்பின் குன்னூர் ரயில் நிலையத்தை பார்வையிட்டனர்.

இது குறித்து இங்கிலாந்‌து நாட்டை சேர்ந்த கிறிஸ்டஹர் கூறுகையில்,`கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தோம். முதலில் டார்ஜிலிங், சிம்லா சுற்றுலா முடித்து விட்டு குன்னூருக்கு நீராவி இன்ஜின் மலை ரயிலில் வந்தோம். பயணம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.