Bypolls: அதிமுகவும் தேமுதிகவும் கூட்டு? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு! திமுக நிலை?

Erode East Byelection 2023: ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். இதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நாளை, அதாவது  ஜனவரி 31-ம் தேதி தொடங்கவிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது. 

அரசியல் களம்

இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டுவரும் நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேமுதிகவின் துணைச் செயலாளர் சுதீஷ் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று மாலை சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவித்து கட்சியின் சார்பாக வேட்பாளரும் அறிவித்திருந்தனர். நாளை வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் கிழக்குத் தொகுதியில் இருக்கின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேர் மற்றும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 23 வாக்காளர்கள், ராணுவ வாக்காளர்கள் 22  பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்? பாதகம்?

பொதுவாகவே இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்றே அனைவரும் கூறிவரும் நிலையில், திமுக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸில் நிலவும் கோஷ்டிப் பூசல் காரணமாக, அதிமுகவுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கலாம். ஆனால், ஆளும் கட்சி இந்த வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

2021 சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பாக தமாகாவுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. எம்.யுவராஜா போட்டியிட்டு 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று, அதாவது 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் இறந்த நிலையில் வந்திருக்கும் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடுகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.