இந்தியாவிலும் வாழ்ந்துள்ள டைனோசர்கள்! 256 முட்டைகள் கண்டுபிடிப்பு!

டைனோசர்கள் பற்றி நாம் சிறுவயதிலிருந்தே பல கதைகளை கேட்டறிந்திருப்போம் ஆனால் டைனோசர்களை பற்றி கூறும் பலரும் ஒருமுறை கூட டைனோசரை பார்த்ததாக கூறியதில்லை.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழும் காலத்திற்கு முன்பிலிருந்து டைனோசர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.  டைனோசரின் உருவம் பற்றிய பல புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்த்திருக்கிறோம்.  டைனோசர் பற்றிய கற்பனைகளும் நமக்கு சிறுவயதிலிருந்தே இருந்திருக்கக்கூடும், நமக்கு தெரிந்தவரை டைனோசர் உருவ அளவில் பெரியதாக இருக்கும்.  சில ஆய்வுகளின்படி டைனோசர் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழவில்லை என்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. டைனோசர் என்கிற விலங்கு இருப்பது என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை என்று சிலர் கூறினாலும் சில ஆய்வுகள் டைனோசர் உலகில் வாழந்ததற்கான ஆதாரங்களை காட்டுகிறது.

பல இடங்களில் டைனோசரின் முட்டைகள், கூடுகள் மற்றும் எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வரும் நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தின் நர்மதா பள்ளத்தாக்கில் ஒரு அரிய மற்றும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.  மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான தார் மாவட்டத்தில் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழுவால் 92 நெருக்கமாக அமைந்துள்ள டைனோசர் கூடுகளும், தாவரவகை டைனோசர்களின் 256 புதைபடிவ முட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  டைனோசரின் முட்டைகள் மற்றும் கூடுகள் இதற்கு முன்னர் உலகின் பல பகுதிகளிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது.  தற்போது நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் மூலமாக மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு மத்திய பிரதேசத்தின் நர்மதா பள்ளத்தாக்கு பகுதியானது டைனோசர்களின் வளமான குஞ்சு பொரிக்கும் இடமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2017 மற்றும் 2020 க்கு இடையில் தார் மாவட்டத்தின் பாக் மற்றும் குக்ஷி பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை மேற்கொண்டது.  இந்த ஆராய்ச்சியில் ஹர்ஷா திமான், விஷால் வர்மா, ஜி.வி.ஆர் பிரசாத் போன்ற பலர் கலந்துகொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.  தார் மாவட்டத்தின் கிராமங்களில் காணப்படும் கூடுகள் மற்றும் முட்டைகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளதாக கருதப்படுகிறது.  நர்மதா பள்ளத்தாக்கின் இந்தப் பகுதிக்கு டைனோசர்கள் முட்டையிட வந்திருக்கலாம் அல்லது அங்கேயே குஞ்சு பொரித்திருக்கலாம்.  இங்கு காணப்படும் முட்டைகள் குஞ்சு பொரித்ததற்கும், குஞ்சு பொரிக்காததற்கும் ஆதாரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.  இங்கு எலும்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மைக்ரோ சிடி ஸ்கேன் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.  நர்மதா பள்ளத்தாக்கில் காணப்படும் கூடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருப்பதாகவும், அந்த கூடுகள் 15 செ.மீ முதல் 17 செ.மீ விட்டம் அளவில் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  ஒவ்வொரு கூட்டிலும் ஒன்று முதல் 20 முட்டைகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.