லேட் நைட் மீட்டிங்… எடப்பாடி நம்பிக்கை; செங்கோட்டையன் பளீச்!

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் பகுதி செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின் படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார பணிகளை கட்சியினர் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

மாறிய மனநிலை

மக்களை சந்திக்கும் போது அவர்கள் மாற்றத்தை விரும்புவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு மக்களின் மனநிலை மாறியுள்ளது. வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக களத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எடப்பாடி அவர்களும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி சென்றுள்ளார். இந்த இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும்.

அதிமுகவிற்கே வெற்றி

அதிமுக மாபெரும் வெற்றியை பெறும். நாளை பணிமனையை திறக்க இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து விரைவில் வேட்பாளரை அறிவிப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து 20 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு முறையாக வாக்குச்சீட்டுகளை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இறந்து போன ஐந்தாயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

செங்கோட்டையன் நம்பிக்கை

அதுகுறித்தும் அதிகாரிகள் முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனியார் விடுதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரட்டை இலை சின்னம்

அதில் கட்சியின் வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். தேர்தல் செலவை ஏற்க கட்சியினர் பலரும் தயங்கிய நிலையில் அதை யார் ஏற்பது? என விரிவாக பேசினர். அடுத்து இரட்டை இலை சின்னம். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அடுத்த மூன்று நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி ஆலோசனை

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பதிலளிக்கும். இரட்டை இலை சின்னத்திற்காக உரிமை கோரும். இதனால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது. வழக்கமாக ஒரே கட்சிக்குள் இரண்டு அணிகள் சின்னத்தை கோரும் பட்சத்தில் விரிவான விசாரணை செய்த பின்னரே ஒதுக்கீடு செய்யப்படும்.

கட்சியினருக்கு நம்பிக்கை

அவசர கால நடவடிக்கையாக சின்னம் முடக்கப்பட்டு தற்காலிகமாக சுயேட்சை சின்னங்கள் அளிக்கப்படும். அதற்கான வாய்ப்பே அதிகமிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சின்னம் கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது பற்றியும் ஆலோசித்தனர். நள்ளிரவு 12 மணி வரை நடந்த கூட்டத்தில், எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை அளித்துவிட்டு சென்றுள்ளாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.