அதானி விவகாரம்: மெளனம் காக்கும் மோடி அரசு – பின்னணி என்ன?!

ஹிண்டன்பர்க் அறிக்கை

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது. அந்தக் குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “அதானி குழுமம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டோம்.

அதானி குழுமம்

அதில் அதானி குழுமத்தை சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் பலமானதாக காட்டி, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தது, வெளி நாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது” என்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. இதையடுத்து பங்குசந்தையில் அந்த குழுமத்தின் பங்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

பங்குச் சந்தையில் பாதிப்பு

இதற்கு பதிலளித்திருக்கும் அதானி குழுமம், “அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயல்கிறது. இந்தத் தவறான அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியப் பங்குச் சந்தையிலும் இந்த அறிக்கை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.

ஹிண்டன்பர்க்

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் மோடி அரசு மெளனமாக இருந்து வருவது ஏன் என்பது குறித்த கேள்வி எழுகிறது.

ஒரு கொடியில் இரு மலர்கள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், “மோடியும் – அதானியும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள். எல்.ஐ.சி-யும், எஸ்.பி.ஐ-யும் கடன் கொடுப்பதற்கு முன்வரும் பொழுது எப்படி இந்த பிரச்னையில் தலையிடுவார்கள். நாளைக்கு நாடாளுமன்றத்தில் பிரச்னை வரும் போது மக்கள் பணத்துக்கு இதனால் எந்த பிரச்னையும் வராது என்பார்கள். 2002-ல் கலவரத்தின் போது மோடியின் இமேஜ் மிகவும் சரிந்தது.

அப்போது கை கொடுத்து தூக்கி விட்டவர் அதானி தான். அப்போது தான் குஜராத் மாடல் உருவானது. மேலும் இந்தியாவிலேயே குஜராத் தான் மிகப்பெரிய சாதனை படைத்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினார்கள். எனவே மோடி எந்த சூழ்நிலையிலும் அதானியை கைவிடமாட்டார். எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கே அதானியை அழைத்து செல்கிறார். இதற்கு இஸ்ரேல், இலங்கையை எடுத்துக்காட்டாக கூற முடியும். அரசு முழுவதுமாக அதானிக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது.

பிரியன்

இதனால் வெளியில் வந்து ஆதரிக்கவும் மாட்டார்கள், எதிர்க்கவும் மாட்டார்கள். மறைமுகமாக அவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள். மக்கள் பணம் போனதை பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அதானியை பாதுகாப்பாக கரை சேர்க்க என்ன தேவையோ அதை செய்வார்கள். மக்களுடைய பணம் மீது பெரிய அக்கறை இருப்பது போல் தெரியவில்லை.

பொதுத்துறை வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கெட்டுவிடும். எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். காங்கிரஸும் ஆதரவாக தான் இருந்தார்கள். இவர்கள் கொஞ்சம் கூடுதலாக அம்பானிக்கு, அதானிக்காகவும் வேலை செய்கிறார்கள்” என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “மத்திய அரசு மெளனமாக இருப்பதை பார்க்கும் போது தவறு நடந்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. பிரதமர் மோடியின் ஆத்மார்த்தமான நண்பர் தான் அதானி. எனவே அவருடைய நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வருகிற போது பிரதமரோ, நிதியமைச்சரோ, குறைந்தபட்சம் நிதித்துறையின் செயலாளர் அல்லது எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ-யாவது ஏதேனும் ஒரு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் அமைதி காப்பதை பார்த்தால் இதில் தவறு உறுதியாக நடந்திருக்குமோ என்று தான் தோன்றுகிறது” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “மத்திய அரசு இதில் என்ன செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதை அந்நிறுவனத்தார்கள் மறுத்திருக்கிறார்கள். அரசு இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. எலஐசி மற்றும் எஸ்பிஐ எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்திருக்கிறது. எனவே அரசு இதில் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.