ஆளுநர் உத்தரவுப்படி பாரம்பரிய உடையில் வந்த புதுவை தலைமைச்செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள்

புதுச்சேரி: ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி பாரம்பரிய உடையில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் இன்று அலுவலகங்களுக்கு வந்தனர். குறிப்பாக தலைமைச்செயலர் முதல் ஆட்சியர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆளுநர் உத்தரவை கடைப்பிடித்தனர்.

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சில நாட்களுக்கு முன்பு இரு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, நெசவாளர்கள் பயனடையும் வகையில் மாதத்தின் முதல் நாள் அரசு ஊழியர்கள் நமது பாரம்பரிய உடையான கதர், கைத்தறி ஆடைகளை அணிந்து வர வேண்டும். மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும்.

இந்த கூட்டத்தில் உயரதிகாரிகள் தவறாமல் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆளுநர் உத்தரவுக்கு பிறகு இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால் பல அரசு ஊழியர்கள் வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தனர். தலைமை செயலகத்தில் பல அரசு துறைகளை சேர்ந்த ஆண், பெண் ஊழியர்கள் வேட்டி, சேலை என பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். குறிப்பாக தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலர் ராஜீவ்வர்மா, ஆட்சியர் வல்லவன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். இதேபோல வரும் 15ம் தேதி பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கவுள்ளது. மக்கள் நேரடியாக தங்கள் குறைகளை அதிகாரிகளை சந்தித்து தரலாம். 30 நாட்களுக்குள் நடவடிக்கை தொடர்பான விவரம் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.