ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி; ஏழைகள், நடுத்தர வர்க்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; சுதந்திர இந்தியாவின் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய பட்ஜெட்  வரலாற்று சிறப்பு மிக்கது.  வளர்ந்த இந்தியாவின் உறுதியையும், லட்சிய சமுதாயத்தின் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கான வலுவான அடித்தளத்தை நிறுவியுள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடந்த ஆண்டுகளில் அரசுபல குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்துள்ளது.  அவை வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்துள்ளன. இதனால்  2047ம் ஆண்டு கனவுகளை நனவாக்குவதில் நடுத்தர வர்க்கத்தினரின் திறனை இந்த பட்ஜெட் மேம்படுத்தும்.

 எப்பொழுதும் நடுத்தர வர்க்கத்தினருடன் நிற்கும் எங்கள் அரசு அவர்களுக்கு பெரும் வரிச்சலுகையை அளித்துள்ளது. இந்த பட்ஜெட் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து, ஏழைகள், கிராமங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் லட்சிய சமுதாயத்தின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் சமர்பித்த ஒன்றிய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன், அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துகள். பிரதமர் விஸ்வகர்மா கவுசல் சம்மான் திட்டம் கோடிக்கணக்கான விஸ்வகர்மாக்களின் வாழ்க்கையில்  பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.  சிறப்பு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு குறிப்பாக சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு வலு சேர்க்கும் .

மேலும் இந்த பட்ஜெட் கிராமப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தும்.  கூட்டுறவு துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.  சிறுதானியங்கள் உலகம் எங்கும் செல்ல  சூப்பர் புட் அண்ணா’ என்ற புதிய அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் சிறு விவசாயிகள் மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு பொருளாதார ஆதரவு கிடைக்கும்.

மேலும் பட்ஜெட்டில், தொழில்நுட்பம், புதிய பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். சாலை, ரயில், மெட்ரோ, துறைமுகம், நீர்வழிகள் என அனைத்து துறைகளிலும் நவீன உள்கட்டமைப்புகளை இன்றைய இந்தியா விரும்புகிறது. 2014ம் ஆண்டை விட உள்கட்டமைப்புக்கான முதலீடு 400 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த முதலீடுகள் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.  இதன் மூலம் மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு புதிய வருமான வாய்ப்புகளை பெறுவார்கள். சிறுகுறு நிறுவனங்களுக்கு  ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் உத்தரவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.