மனிதநேய வார நிறைவு விழா ஊட்டியில் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-ரூ.5.62 லட்சத்தில் வழங்கப்பட்டது

ஊட்டி : ஊட்டியில் நடந்த மனிதநேய வார நிறைவு விழாவில் 9 பயனாளிகளுக்கு ரூ.5.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா ஊட்டியில்  கடந்த 24ம் தேதி துவங்கியது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி  அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்து  பார்வையிட்டார். மனிதநேய வார விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவியர்கள் பங்கேற்ற நாட்டியம், நாடகம், பேச்சு, கவிதை, ஓவியம், பாட்டு,  திருக்குறள், கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து நிறைவு  விழா நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  சுகந்தி பரிமளம் தலைமை வகித்தார். தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி  பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவியர்களுக்கு கேடயங்கள், சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து  ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5500 மதிப்பில் தையல்  இயந்திரம், சமூக நலத்துைற சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு  திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் வைப்பு பத்திரம்  வழங்கப்பட்டது.

மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1.70 லட்சம்  மதிப்பில் 3 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், தாட்கோ சார்பில் ரூ.3.37  லட்சம் மதிப்பில் 3 பேருக்கு வங்கி கடனுதவி பெறுவதற்கான ஆணை என மொத்தம் 9  பயனாளிகளுக்கு ரூ.5.62 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.

இதில் தேவாலா, கப்பாலா, காஞ்சிக்கொல்லி, பொக்காபுரம்,  குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள், தக்கர்பாபா அரசு  ஆதிதிராவிடர் நல நடுநிலை பள்ளி, ஊட்டி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி  ஆகியவற்றை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக  சிவா, தாட்கோ பொது மேலாளர் ரவிச்சந்திரன், ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர்  (பொறுப்பு) சனில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  வட்டாட்சியர்கள் மகேஸ்வரி, மணிமேகலை, பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.