இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அதிகரிக்கும் மோதல்… அங்கு என்ன செய்கிறது அமெரிக்கா?!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கமாக இருந்துவருகிறது.

ஏவுகணை தாக்குதல்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாலாஸ்தீனம் மீது இஸ்ரேல் திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட அந்த ஏவுகணைத் தாக்குதலில், 5 வயது சிறுமி உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். அந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 2023 புத்தாண்டு பிறந்ததிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துவருகிறது. மோதல் சம்பவங்களில் 29 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேற்கு கரைப் பகுதியில் அமைந்திருக்கும் ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, வயதான பெண்மணி ஒருவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து இரண்டு ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டன. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காஸா மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.

பாலஸ்தீனம் கொடி

மேலும், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஜெருசலேம் பகுதியில் அமைந்திருக்கும் யூதர்களின் வழிபாட்டுத்தலத்தில் பாலஸ்தீனியர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில், ஏழு பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில், பாதுகாப்பிற்காக இஸ்ரேலியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் வழங்கும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும், இஸ்ரேலியர்களுக்கு துப்பாக்கி உரிமத்தை வழங்குவதை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாத தாக்குதல் நடத்துபவர்களின் வீடுகள் கண்டறியப்பட்டு உடனடியாக சீல் வைக்கப்படும், அந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படும், பயங்கரவாத தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு நன்மைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அறிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் பெஞ்சமின் நெதன்யாகு

இந்தச் சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அந்தப் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்காக அவர் அங்கு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடமும் அப்பாஸிடமும் தனித்தனியாக ஆண்டனி பிளிங்கன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன. இரு தலைவர்களிடமும் அவர் ஆலோசனை நடத்தினாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அதன் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு வெளிப்படையான ஒன்று. எனவே, ஆண்டனி பிளிங்கனின் பயணத்தால், அங்கு அமைதி ஏற்படுமா, மோதல் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு இன்னும் சில நாள்களில் விடை தெரிந்துவிடும்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.