ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது.

இதில், ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக, சமக ஆகியவை போட்டியிட வில்லை.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தனது கூட்டணி கட்சிகளான தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்ற நிலையில், பாஜகவின் ஆதரவையும் கோரி இருந்தது. பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் தாமதித்து வந்தது.

இந்த நிலையில், அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவதாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று காலை அதிரடியாக அறிவித்தார்.

‘கட்சியின் ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, இடைத்தேர்தலில்அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்படுகிறார்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அதிமுகவில் தனி அணியாக செயல்படும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நேற்று மாலை அறிவித்தார். தனதுஆதரவாளரான செந்தில் முருகன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

‘சசிகலாவிடம் ஆதரவு கேட்போம்’: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘‘அதிமுக சார்பில் வேட்பாளராக செந்தில் முருகனை நிறுத்துகிறோம். இவர் பதவியில் இல்லாவிட்டாலும் கட்சியின் விசுவாச தொண்டர். உறுதியாக, சசிகலாவை நேரில் சந்தித்து எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கேட்போம். பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்தி, ஆதரவு கேட்டால், எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவோம். நிலைப்பாடு குறித்து விரைவாக தெரிவிக்குமாறு, தேசியக் கட்சியான பாஜகவை நிர்ப்பந்திக்க முடியாது. இரட்டை இலை சின்னம் முடங்க ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். இபிஎஸ் நிறுத்தும் பொது வேட்பாளருக்கு ஏ, பி படிவங்களில் கையெழுத்திடுமாறு கேட்டால், கட்டாயம் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன்’’ என்றார். முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் உடன் இருந்தனர்.

‘இரட்டை இலை’ சின்னம் யாருக்கு?: இபிஎஸ், ஓபிஎஸ் ஒரே நாளில் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்திருப்பது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் இரட்டை இலை சின்னத்தை கேட்கக்கூடும்.

இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு இபிஎஸ்தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதுதொடர்பாக தேர்தல் ஆணையமும், ஓபிஎஸ்ஸும் பிப்.3-ம் தேதிக்குள் (நாளை) பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது நாளை தெரிந்துவிடும்.

வேட்பாளர்கள் பற்றி..: இபிஎஸ் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு (65), ஈரோடுநகர அதிமுக செயலாளர், எம்ஜிஆர் மன்றசெயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 2001 சட்டப்பேரவை தேர்தலில், ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியிலும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் வெற்றி பெற்றார். கடந்த 2021 தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. தென்னரசு தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றசெயலாளர், தமிழ்நாடு துணி நூல் பதனிடும் ஆலைகளின் தலைவர் மற்றும் சிலஅமைப்புகளில் பொறுப்பில் உள்ளார். ஸ்கிரீன் பிரின்ட்டிங் பட்டறை நடத்துகிறார். ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியில் வசிக்கிறார்.

ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.செந்தில் முருகன் (40), எம்பிஏ நிதி மேலாண்மை படித்தவர். லண்டனில் நிதி ஆலோசகராக பணியாற்றி வந்தவர், கரோனா காலகட்டத்தில் நாடு திரும்பி, தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். ஒருங்கிணைந்த அதிமுகவில் உறுப்பினராக இருந்தவர். இவரது தந்தை, நூல் வியாபாரியாக இருந்தவர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வளையக்கார வீதியில் செந்தில் முருகன் வசிக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.