கூகுளில் ஆரம்ப நிலை கோடிங் பணிக்கு ChatGPT நியமிக்கப்படலாம் என தகவல்

கலிபோர்னியா: ‘தொழில்நுட்பம் இயந்திரங்களை மனிதன் போலவும்; மனிதனை இயந்திரங்கள் போலவும் மாற்றி விடுகிறது’ என்ற மேற்கோள் ஒன்று உண்டு. அதனை நிஜ வாழ்வில் இப்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம். உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள சாட் ஜிபிடி (ChatGPT), கூகுள் நிறுவனத்தில் ஆரம்ப நிலை கோடிங் பணிக்கு தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியை பெற்றுள்ளதாக தகவல். இதனை கூகுளே சோதித்துப் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

உலக அளவில் முன்னணி டெக் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளன. அதில் கூகுள் நிறுவனமும் ஒன்று. இந்தியர்கள் உட்பட பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஆன ChatGPT, கோடிங் பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளது.

ChatGPT-யின் வருகை கூகுள் உட்பட பல டெக் நிறுவனங்களுக்கு இம்சை கொடுத்து வருகிறது. வரும் நாட்களில் கூகுளுக்கு மாற்றாக கூட இது இருக்கலாம் என சொல்லப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் அறிமுகமான ChatGPT-க்கு ஃபாலோயர்கள் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

ChatGPT-க்கு உள்ள கோடிங் எழுதும் திறன் பலரையும் அச்சுறுத்தி வருகிறது. மனிதர்களிடம் இருக்கும் படைப்பாற்றல், உணர்திறன் மற்றும் இன்னும் பிற திறன்களை இந்த சாட்பாட் கொண்டிருக்காததால், மனிதர்கள் மேற்கொள்ளும் வேலைகளுக்கு ஒருபோதும் மாற்றாக முடியாது என அதுவே முன்னர் தெரிவித்தும் உள்ளது.

இந்த சூழலில் கூகுள் நிறுவனம் வடிவமைத்து வரும் பீட்டா பயன்பாட்டில் உள்ள செயற்கை நுண்ணறிவு பாட் உடன் ChatGPT-யை கூகுள் நிறுவனம் ஒப்பிட்டு பார்த்துள்ளது. இந்த ஒப்பீட்டில் L3 எனும் பணிக்கு ChatGPT தகுதி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இருந்த போதும் இரண்டு சாட்பாட்களும் ஒருபோதும் புரோகிராமர்களுக்கு மாற்றாக வரும் நாட்களில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் புரோகிராமர்கள் தங்களது பணியை திறம்பட மேற்கொள்ள சாட்பாட்கள் உதவும் எனவும் தெரிவித்துள்ளன.

ChatGPT? – ChatGPT தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட். இதனை ஓபன் ஏஐ எனும் ஆய்வக நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.