Thalapathy 67: 'தளபதி 67'க்கு மாஸான டைட்டில் வைத்த லோகேஷ்… நாளை வெளியீடு

Thalapathy 67 Title Reveal Update: தளபதி 67 என்றழைக்கப்படும் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய் – லோகேஷ் ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கடந்த மாதமே இப்படத்திற்கு பூஜை செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், வாரிசு வெளியீட்டு பின் மூன்று வாரங்கள் கழித்து அதன் படப்பூஜையின் வீடியோவை படக்குழு நேற்றுதான் வெளியிட்டது. முன்னதாக, இந்த வாரம் முழுவதுமே அப்டேட் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த படத்தில், சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். 

தரையில் நடந்ததெல்லாம், திரையில் வருவது போல படக்குழுவின் ஒவ்வொரு அசைவும் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வந்தது. படக்குழு அறிவிப்புக்கு முன்னரே ரசிகர்கள் இந்த அனைத்தையும் கணித்துவிட்டதால் ‘புதுசா அப்டேட் விடுங்க பாஸ்’ என கோரிக்கை விடுகின்றனர். அதற்கெல்லாம், சளைக்காமல் அப்டேட்டை அள்ளிவீசி வருகிறது படக்குழு. 

முன்னதாக, பிப். 1, 2, 3 ஆகிய தேதிகளை நோட் பண்ணுங்க என லோகேஷ் கனகராஜ் கோயம்புத்தூரில் கூறியிருந்தார். அதேபோன்று, நேற்று திரிஷா படத்தில் நடிப்பதையும், படப்பூஜையையும் படக்குழு வெளியிட்டிருந்து. அதனால், இன்றைய அப்டேட் குறித்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதில், ஓடிடி, சாட்டிலைட் உரிமை குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. ஓடிடி – நெட்பிளிக்ஸ்; சாட்டிலைட் உரிமை – சன் டிவி. 

இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘விக்ரம்’ ஸ்டைல் ப்ரோமோ நாளை படத்தின் பெயருடன் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் Lokesh Cinematic Universe உடன் சேர்ந்ததா அல்லது மாஸ்டர், மாநகரம் போன்று Stand Alone படமா என்பது நாளை உறுதியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த அப்டேட்’ என தளபதி 67 படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் நாளை மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.