கர்நாடக சட்டசபை தேர்தல்: வாக்காளர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் மாறி, மாறி இலவச குக்கர் வினியோகம்

பெங்களூரு,

கர்நாடகாவில் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் களத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவா்கள் பஸ் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

ஆளும் பா.ஜனதா ஏற்கனவே ஜனசங்கல்ப யாத்திரையை நடத்தியது. தொடர்ந்து தற்போது விஜய சங்கல்ப யாத்திரையை கடந்த ஜனவரி 21-ந்தேதி தொடங்கியது.

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பொறுப்பாளராக, மத்திய கல்வி, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இதுபற்றிய அறிவிப்பு கடந்த 4-ந்தேதி வெளியானது.

இதேபோன்று, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி, பஞ்சரத்னா யாத்திரையை நடத்த திட்டமிட்டு உள்ளார். முதல்-மந்திரியானால், கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்துவோம் என அவர் கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்க, நெருங்க பல்வேறு திட்டங்களுடன் வாக்காளர்களை கவரும் அடுத்த கட்ட நடவடிக்கையில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளன.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமலிங்கா ரெட்டி ஆகியோர் தங்களது தொகுதிகளில் நேற்று வாக்காளர்களுக்கு இலவச குக்கர்களை வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்தந்த குக்கர்களில் தங்களுடைய கட்சியின் சின்னம் மற்றும் அந்த இரு தலைவர்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்று உள்ளன. சமீபத்தில் கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதன்படி, தென்பகுதியின் நுழைவு வாயில் என கர்நாடகாவை பா.ஜ.க. எண்ணுகிறது. அதனால், ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையில் அக்கட்சி முனைப்புடன் இறங்கி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.