கீழடியில் அருங்காட்சியகம் அமைய உள்ள நிலையில் அகழ்வாய்வு தளங்களை காட்சிப்படுத்த தொல்லியல் துறை முடிவு

சிவகங்கை: கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைய உள்ள நிலையில் அகழ்வாய்வு தளங்களை காட்சிப்படுத்த தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. பண்டைய தமிழரின் வாழ்வியல், விவசாயம் தொழில் மற்றும் கல்வியறிவு குறித்த ஆய்வுகளை மத்திய தொல்லியல்துறை மேற்கொண்டுவந்த நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறையும் ஐந்து கட்ட அகழ்வாய்வை நடத்தி முடித்துள்ளது. அப்போது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் தமிழர் வாழ்வியலில் தொன்மை வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில் அங்கு கண்டெடுக்கப் பட்டவற்றை காட்சி படுத்த இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடி செலவில் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இரும்பு, சுடுமண் அழகு சாதனம், தங்கம், எலும்புகள் உள்ளிட்டவற்றை தனித்தனியாக காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த அகழ்வாய்வு தளங்களை பார்வையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கு வசதியாக மேடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காக 20 அடி நீளம் 12 அடி அகலத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள தளத்தில் தொல்லியல் துறையின் அகழ்வாய்வு பணிகள் குறித்த காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கபட இருக்கின்றன. அருங்காட்சியக கட்டிடங்களினுள் அந்தந்த பொருள்களின் தன்மைக்கு ஏற்ப சுவர்களில் படைப்பு சிற்பங்களை காட்சிப்படுத்தபட முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்புற அறையில் தமிழர்களின் அடையாளமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு காளையின் பிரம்மாண்ட சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட பொருட்கள் உள்ள கட்டிடத்தில் மண்பானை புடைப்பு சிற்பங்கள் வைக்கப்பட உள்ளன.

அருங்காட்சியகத்தில் ‘மேக்கிங் ஆப் கீழடி’ என்ற பெயரில் அகழ்வாய்வு பணி குறித்த ஒலி, ஒளியும் காட்சியும் தினசரி ஒளிபரப்பபட  உள்ளன. பொருட்களை காட்சிப்படுத்த 6 கட்டட தொகுதிகள் உட்பட 10 தொகுதிகள் அமைந்துள்ளன அவை அனைத்திலும் இடம்பெறும் வகையில் புடைப்பு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. கீழடி அருங்காட்சியகத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் வரவுள்ள நிலையில் அனைவரையும் கவரும் விதத்தில் அதனை வடிவமைக்க முடிவு செய்துள்ள தொல்லியல் துறையினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.