சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பு

வாஷிங்டன்: வானிலை ஆராய்ச்சி என்ற பெயரில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான உளவு பலூன்களை சீனா பறக்க விட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி சீன உளவு பலூன், அமெரிக்க வான் பரப்பில் நுழைந்தது. இந்த பலூன் கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் மான்டனா மாகாண பகுதிக்கு மேலே பறந்தது. அப்பகுதியில் உள்ள மால்ஸ்ட்ரோம் விமானப் படைத் தளத்தில் அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானப்படைத் தளத்தை உளவு பார்க்கவே அப்பகுதியில் சீன பலூன் பறக்கவிடப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. இதை மறுத்த சீன வெளியுறவு அமைச்சகம், “சீன பலூன் வானிலை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. வழிதவறி அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து விட்டது” என்று விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை அமெரிக்க அரசு ஏற்கவில்லை.

அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி நேற்று சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதில் சிதறிய பலூன், அமெரிக்காவின் கரோலினா பீச் நகரம் அருகே கடல் பகுதியில் விழுந்தது.

சீன வெளியுறவுத் துறை கூறும் போது, “சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கா செயல்பட்டிருக்கிறது. வானிலை ஆராய்ச்சிக்கான எங்களது பலூனை சுட்டு வீழ்த்தியது சட்டவிரோதம். இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது:

பயணிகள், சரக்கு விமானங்கள் 40,000 அடி உயரத்தில் பறக்கும். போர் விமானங்கள் 65,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டவை. சீனாவின் உளவு பலூன் ஒரு லட்சத்து 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. இதை ரேடாரில் கண்டுபிடிப்பது கடினம்.

மூன்று பேருந்துகளின் அளவு கொண்ட சீன பலூன் ஹீலியம் வாயு, சூரிய எரிசக்தியில் பறக்கக் கூடியது. சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் பாகங்களை சேகரித்துள்ளோம். இப்போது வேறு எந்த தகவலும் வெளியிட முடியாது. இவ்வாறு அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

தைவானை சீனா ஆக்கிரமிக்க அமெரிக்கா தடையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருப்பது இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

சீனாவை சமாளிக்க பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்காவின் 5 விமானப் படை தளங்களில் போர் விமானங்களை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்டன் கடந்த 3-ம் தேதி சீனாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். சீன பலூன் விவகாரத்தால் அவர் தனது பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் செயல்படுகின்றன. தைவான், உக்ரைன் விவகாரங்களால் இரு அணிகளுக்கும் இடையே 3-ம் உலகப்போர் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.