ராணுவ வீரர் கொலை: போராட்டத்தை முன்னெடுக்கும் பாஜக – மௌனம் கலைக்குமா திமுக அரசு?

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தி.மு.க கவுன்சிலர் சின்னசாமிக்கு இடையே கடந்த 8-ம் தேதி நடந்த வாக்குவாதம், கைகலப்பானது. அதில் பிரபாகரன், அவர் தம்பி பிரபு உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு, கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், “ராணுவ வீரர் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் கொலையில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. தாக்கியவர்கள், காயமடைந்தவர்கள், உயிரிழந்த ராணுவ வீரர், அனைவரும் நெருங்கிய உறவினர்கள்தான். சாதாரணமாக தொடங்கிய சண்டை கைகலப்பாக மாறி, கொலையில் முடிந்திருக்கிறது. இதனை சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், ‘திட்டமிட்ட கொலை’ என அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைதளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர். அப்படி பரப்புரை செய்யும் நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

சரோஜ் குமார் தாகூர்

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “ஒரு ராணுவ வீரர் தி.மு.க குண்டர்களால் அடித்தே சாகடிக்கப்பட்டிருக்கிறார். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று கடந்து செல்ல முயல்கிறது தி.மு.க. தி.மு.க-வினர் இது குறித்து கருத்து சொல்லக்கூட தயங்குகின்றனர். ‘இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், நமக்காக சேவை புரிந்த ஒருவரை கொடூரமாக அடித்தே கொன்றிருப்பது கொடூரம். என் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன்’ என்று முதல்வர் குரல் கொடுக்காமல் அமைதி காப்பது ஏன்… இந்தப் படுகொலைக்கும், தி.மு.க-வுக்கும் என்ன தொடர்பு… தொடர்ந்து 2021 மே மாதம் தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்றுவரை தி.மு.க-வின் மேடைப் பேச்சாளர்கள், நிர்வாகிகள், சில அமைச்சர்கள் தி.மு.க-வை எதிர்ப்பவர்களை தரக்குறைவாகப் பேசுவதும், மிரட்டும் தொனியில் பேசுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

நாராயணன் திருப்பதி

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களின் கையை வெட்டுவோம் என்று ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேசியதும், ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், `திருவாரூருக்கு வந்து பேசிவிட்டு, அண்ணாமலை எப்படி திரும்பி போக முடிந்தது’ என்று பேசியதும், ஒரு பேச்சாளர், `தீவிரவாதிகளை அனுப்பி ஆளுநரைக் கொலைசெய்வோம்’ என்று பேசியதும், தி.மு.க-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள், `சட்டமன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு இல்லை’ என்று பேசியதும், தி.மு.க-வின் அடிமட்ட தொண்டனைக்கூட பதவி வெறியில், அதிகார போதையில் ஆழ்த்தியிருக்கிறது. அதிகாரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவத்தில் ஒவ்வொரு தி.மு.க-வினரும் செயல்படுவதை நாம் உணர முடிகிறது. தற்போது கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் ஒருவர் அடித்தே படுகொலைசெய்யப்பட்டிருப்பதும், ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில்தான் என்பதில் சந்தேகமில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இதை உணர்ந்து, தன் கட்சியினருக்கு புரியும்விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழகம் வன்முறைக்காடாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 21-ம் தேதி சென்னையில் மெழுகுவத்தி பேரணி நடத்த அந்தக் கட்சியினர் முடிவெடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனை தொடர்பு கொண்டு பேசினோம். “கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே இந்திய ராணுவ வீரர் பிரபு அவர்களை தி.மு.க கவுன்சிலர் வெட்டிக் கொலைசெய்திருக்கிறார். பா.ஜ.க பட்டியல் அணியின் தலைவர் தடா பெரியசாமி அவர்களின் இல்லத்தில் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் வெட்டிக் கொலைசெய்யப்படுகிறார்கள்.

கரு.நாகராஜன்

பெண் காவலர்கள் தி.மு.க-வினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த முடியாத, கையாலாகாத தி.மு.க அரசைக் கண்டித்தும், இறந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஸ்டாலின் மாடல் அரசின் அநீதியான அலட்சியப்போக்கை தட்டிக் கேட்கவும், வருகிற 21-ம் தேதி காலை மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணா நோன்பும், மாலை 4 மணிக்கு மக்கள் கலந்துகொள்கிற மெழுகுவர்தி ஊர்வலமும் நடைபெறவிருக்கிறது. ஊர்வலத்தின் இறுதியில் ராணுவ வீரர்கள் தியாகங்களை எடுத்துக்காட்டும் போர் நினைவுச்சின்னத்தில் மெழுகுவர்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது” என்றார்.

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் பேரா ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “இது தேவையே இல்லாதது… அப்படி பார்த்தால் குஜராத், உத்தரப்பிரதேசம், மகராஷ்டிராவில் தினமும் நடத்த வேண்டும். பா.ஜ.க பேசும் சனாதன தத்துவத்தை இங்கு பேச முடியாது. அவர்களின் பார்ப்பனிய ஆதிக்கத்தை இங்கு செலுத்த முடியாது. அப்போது அவர்கள் என்ன அரசியல் செய்வார்கள் என்றால், இது போல் ஒன்றுமில்லாத விஷயத்தைத்தான் முன்வைப்பார்கள். அங்கு நடந்தது, ராணுவ வீரருக்கும் தி.மு.க-காரருக்கும் நடந்த சண்டையில்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

சொந்த அக்கா மகன். இன்னும் சொல்லப் போனால், தி.மு.க கவுன்சிலர் ராணுவ வீரரிடம் சொத்துக்காக சண்டை போடவில்லை. சோப்பு தண்ணீர் பட்டால் மக்கள் குடிக்கும் தண்ணீர் மாசாகும் என்று சொன்னதால், `நான் ராணுவத்தான் சுட்டுக் கொன்றுவிடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதில் யார்மீது தவறு. குடும்பத் தகராறு எதிர்பாராதவிதமாக கொலையில் முடிந்திருக்கிறது. ராணுவத்தையே கேவலப்படுத்தும் வேலையை பா.ஜ.க செய்து வருகிறது. அதன் இன்னொரு முகம்தான் இது. இந்திய ராணுவத்தை கேவலப்படுத்துவதை பா.ஜ.க கைவிடவேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.