IND v AUS: புஜாராவின் 100வது போட்டி, அஷ்வின் – ஜடேஜாவின் இமாலய சாதனைகள்; முதல் நாள் ஆட்டம் எப்படி?

பார்டர் – கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியிருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் என்று கருதப்படும் புஜாராவுக்கு இந்தப் போட்டி ஒரு மைல்கல். இந்தப் போட்டிதான் அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி.

ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனமான் தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கியிருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன் புஜாராவுக்கு சுனில் கவாஸ்கர் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கி கௌரவப்படுத்தினார்.

புஜாரா, எப்போதும் போல் அடக்கமாக, “உங்களைப் போன்ற ஜாம்பவான்களிடமிருந்து இந்தத் தொப்பியைப் பெறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று நன்றி கூறி, “தொடக்கக் காலத்தில் கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள வாலிபனாக இந்தியாவுக்காக விளையாட எண்ணினேன். ஆனால், நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. இன்றைய இளைஞர்கள், இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டுமென்று அவர்களை ஊக்குவிக்கிறேன். எனது மனைவி, எனது குடும்பத்தினர், பி.சி.சி.ஐ-யில் உள்ளவர்கள், எனது சக வீரர்கள் என அனைவருக்கும் நன்றி. மனமார்ந்த நன்றிகள்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

IND v AUS

முதல் போட்டியில் வெற்றிக்குக் காரணமாக இருந்த அஷ்வின் – ஜடேஜா ஜோடி இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை மிரட்டும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னரும் உஸ்மான் கவாஜாவும் ஓப்பனிங் இறங்கினர். ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய வார்னர் 15.2 ஓவரில் 50-1 என்ற ஸ்கோர் இருந்த போது முகமது ஷமி வீசிய பந்தில் பதினைந்து ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாகக் களமிறங்கினார் மார்னஸ் லபுஷேன்.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அஷ்வினின் அபார பந்துவீசினால் 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த லபுஷேன் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் அதே ஓவரில் அஷ்வினின் சுழலில் சிக்கி டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஸ்டீவ் ஸ்மிதத்துக்குப் பின் களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாகக் களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் கடைசி வரையில் களத்தில் நின்றிருந்தார். 50 ரன்களைக் குவித்திருந்த கவாஜா உணவு இடைவேளைக்குப் பின் 81 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

IND v AUS

மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, டக் அவுட் ஆனார். 59 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்த கம்மின்ஸும், ரன் எதுவும் எடுக்காமல் தாமஸ் மர்ஃபியும் ஜடேஜாவின் பந்துவீச்சினால் களத்தை விட்டு வெளியேறினார். அடுத்ததாக நாதன் லயன் 10 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோர் 255-9 என்று இருக்கும்போது களத்தை விட்டு வெளியேறினார்.

9 விக்கெட்டுகளை இழந்து திணறிய ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் மேத்யூ குனமான் களத்திலிருந்தனர். தனது முதல் போட்டியில் பரபரப்புடன் ஆடிய குனமான் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், அஷ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நாளின் இறுதியில் பேட்டிங் செய்த இந்தியா 21-0 என்ற ஸ்கோர் கணக்கில் களத்திலிருக்கிறது.

இன்றைய நாளில் மட்டும் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய அஷ்வின், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டுமே 100 விக்கெட்டுகள் எனும் மைல்கல் சாதனையைச் செய்தார். இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் என்னும் மைல்கல்லை எட்டினார்.

IND v AUS

62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மொத்தம் 252 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 250 விக்கெட்டுகள் என்னும் இந்த மைல்கல்லை அஷ்வின் 45 போட்டிகளில் எட்டி, சாதனை படைத்திருந்தார். அனில் கும்ப்ளே 55 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 61 போட்டிகளிலும், கபில்தேவ் 65 போட்டிகளிலும் 250 விக்கெட்டுகளைக் கடந்துள்ளனர். தற்போது ஜடேஜா இந்தப் போட்டி மூலம் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் என்னென்ன சாதனைகள் படைக்கப்பட இருக்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.