தொடரும் துப்பாக்கி வன்முறை: அமெரிக்க நகரத்தில் 6 பேர் துப்பாக்கி சூட்டில் பலி

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி வன்முறை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அங்கு துப்பாக்கி சூடு நடக்காத நாளே இல்லை என்று சொல்கிற வகையில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் மட்டுமே 5 ஆயிரத்து 500 பேர் பலியாகி உள்ளதாக துப்பாக்கி வன்முறை ஆவண காப்பகம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அங்கு மிசிசிப்பி மாகாணத்தில் டென்னசி, மெம்பிஸிலிருந்து 50 கி.மீ. தெற்கே அமைந்துள்ள அர்கபுட்லா நகரத்தில் நேற்று முன்தினம் 3 துப்பாக்கிகளுடன் வந்து ஒருவர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் அவரது முன்னாள் மனைவி உள்பட 6 பேர் கொல்லப்பட்டது, அந்த நகரை உலுக்கி உள்ளது.

இந்த துப்பாக்கி சூடு நடத்திய 52 வயதான ஆசாமியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அந்த ஆசாமி மட்டுமே தனிப்பட்ட முறையில் நடத்தியதாக மிசிசிப்பி மாகாணத்தின் கவர்னர் டேட் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய ஆசாமி முதலில் அங்கு ஒரு பெட்ரோல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கடைக்குள் நுழைந்து ஒருவரை சுட்டு வீழ்த்தி விட்டு, அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று தனது முன்னாள் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, துப்பாக்கி சூட்டை தொடர்ந்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம், இந்த ஆண்டு வெகுஜனங்கள் மீது நடத்தப்பட்ட 73-வது துப்பாக்கி சூடு சம்பவம் என்று தகவல்கள் கூறுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.