பழனிசாமி பிரசாரத்துக்கு கூட்டத்தை கூட்டி, உங்கள யாரு, மாஸ் காட்டச் சொன்னது?| Speech, interview, report

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:

தோல்வி பயத்தால், தி.மு.க., அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ஈரோடில் முகாமிட்டுள்ளனர். இரட்டை இலை வெற்றியை தட்டி பறிக்க முயற்சிக்கின்றனர். வாக்காளர்களை நாங்கள் சந்திக்க விடாமலும், எங்கள் கூட்டங்கள், பிரசார இடங்களுக்கு அவர்களை வர விடாமல்தடுப்பதிலும், அடைத்து வைப்பதிலும், தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்படி எல்லாம் அவங்கள குதர்க்கமா யோசிக்க வச்சதே நீங்க தான்… பழனிசாமி பிரசாரத்துக்கு கூட்டத்தை கூட்டி, உங்கள யாரு, ‘மாஸ்’ காட்டச் சொன்னது?

பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு:

தர்மபுரி மாவட்டத்துக்காக மட்டுமன்றி, தமிழக மக்களுக்காக,பா.ம.க., தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில், எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள், 55 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் போடும் ஓட்டுகள் தான், ஆட்சியை நிர்ணயம் செய்கிறது. அடுக்குமொழி பேசுபவர்கள், ஏமாற்றுபவர்களுக்கு தேர்தலில் ஓட்டளிக்காமல், தகுதியானவர்களுக்கு வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும்.

latest tamil news

குறிப்பா, ‘ஜாதி பார்த்து ஓட்டு போடக்கூடாது’ அப்படிங்கிற அறிவுரையையும் சேர்த்து சொல்லியிருக்கலாமே!

அரசு மருத்துவர்களின் சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை அறிக்கை:

கர்நாடகாவில் கொரோனா முதல் அலையின் போது, ஊதிய கோரிக்கைக்காக, அரசு மருத்துவர்கள் போராட்டத்தை தொடங்கும் முன்னரே, மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்து, அம்மாநில அரசு கோரிக்கையை நிறைவேற்றியது. ஆனால், மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

எதிர்க்கட்சியான பா.ஜ., ஆளும் மாநிலத்தை, ‘காப்பி’ அடிக்கக் கூடாதுன்னு, தமிழகத்துல டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை, ‘டீல்’ல விட்டுட்டாங்களோ?

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

சினிமா வியாபாரத்திற்காக, அடுத்த தலைமுறையை சீரழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இணையவழி திரைக்கு சில சுய கட்டுப்பாடுகளை, அரசு விதித்துள்ளது. அதை பின்பற்ற வேண்டியது திரைப்படத் துறையினரின் கடமை. அதை விடுத்து, பணத்திற்காக சமூகத்தை சீரழிக்கும்அவலங்களை திணிப்பது, கேடு விளைவிக்கும். இருக்கும் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவதே அழகு. இல்லையேல், அந்த சுதந்திரம் கேள்விக்குறியாகி விடும்.

latest tamil news

நாட்டில் நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேலானவை, சினிமாவை பார்த்து தான் செய்யப்படுகின்றன… குற்றவாளிகளுக்கு பாடம் கற்பிக்கும்களமாகவே சினிமா மாறி உள்ளது, சமீபத்திய சம்பவங்களில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது!

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி:

வணிகர் உரிமை முழக்க மாநாட்டில், முக்கியதீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வழங்க உள்ளோம். பெட்ரோல், டீசல், காஸ் விலையை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர, மத்திய அரசு தயாராக உள்ளது; இதை, மாநில அரசுகளும் ஏற்க வேண்டும்.

உங்க மகன் எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜாவை விட்டு, இது சம்பந்தமா, முதல்வர் ஸ்டாலினிடம் பேசி சம்மதிக்க வைக்க சொல்லுங்க பார்ப்போம்!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் இருந்து, 100 கிலோவுக்கு, 125 ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. அரசு, 100 கிலோ நெல்லை, 2,115 ரூபாய் விலையில் கொள்முதல் செய்கிறது. அதில், லஞ்சமாக கேட்கப்படும் தொகை, 6 சதவீதம். நெல் சாகுபடியில், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது என்ற நிலையில், அவர்களிடம் பணம் பறிப்பது நியாயமல்ல. இதுகுறித்து விசாரணை நடத்தி, பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும்.

latest tamil news

கிலோ நெல்லுக்கு, 1.25 ரூபாய்னு லஞ்சத்தை ஒரே மாதிரி நிர்ணயம் செய்து வாங்குறாங்கன்னா, கணக்கு, ‘மிஸ்’ ஆகாம மேலிடம் வரைக்கும் காசு போகுதுன்னு தானே அர்த்தம்!

ஹிந்து முன்னணி மாநில செயலர் மணலி மனோகர் பேட்டி:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்கொடுமை, காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அல்லது சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுதும் உள்ள ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து, முறைப்படுத்த வேண்டும்.

அட நீங்க வேற… இடியே விழுந்தாலும், ஈரோடில் இருந்து கிளம்ப மாட்டோம்னு அரசு இயந்திரமே அங்க, ‘டேரா’ போட்டு உட்கார்ந்திருக்கு… ஆசிரமத்தை அப்புறம் பார்த்துக்கலாம்!

தமிழக காங்., மாணவரணி தலைவர் சின்னதம்பி பேச்சு:

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கொடுத்த, 505 வாக்குறுதிகளில், 85 சதவீதம் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி, மகத்தான சாதனை புரிந்து உள்ளார். ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற வேண்டியதை, 22 மாதங்களில், 85 சதவீதம் நிறைவேற்றி இருப்பது மிகப்பெரிய சாதனை. எஞ்சியுள்ள, 15 சதவீத வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றும் உறுதியையும் முதல்வர் தந்திருக்கிறார்.

அப்படியா… அப்ப சென்னை, மணப்பாக்கம் வீட்ல படுத்துக்கிட்டே, ஈரோடில் இளங்கோவன் ஜெயிக்கலாமே… ஏன், தொகுதியில் உள்ள வாக்காளர்களை விட, பிரசாரத்துக்கு அதிகமான ஆட்கள் அங்க போயிருக்காங்க?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.