ஆந்திராவில் 175 தொகுதியிலும் தனித்து போட்டியிட தயாரா? – எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ஜெகன் சவால்

தெனாலி: ஆந்திர மாநிலத்தில் வரும் 2024-ம் ஆண்டு 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, இம்முறையும் வழக்கம்போல் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்து களத்தில் இறங்க உள்ளன. ஆனால், இப்போது ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. ஒருவேளை தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்தால், தெலுங்குதேசம், ஜனசேனா மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் நெருங்குவதால் நெருக்கடிகளும் அதிகரித்து வருகின்றன. கட்சிக்குள் உட்பூசல், கட்சி தாவல் நடைபெற்று வருகிறது. நிதி நெருக்கடி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

மாத ஊதியம் தர தாமதமாவதால், அரசு ஊழியர் சங்கத்தினர், முதல்வர் ஜெகன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். போலீஸார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக ஒரு குற்றச்சாட்டும் நிலவுகிறது. மேலும், ஆந்திர தலைநகர் விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி திடீரென 3 தலைநகரங்களை அமைப்போம் என அறிவித்தது, அமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஜெகன்மோகன் ரெட்டியும், அவரது அமைச்சர்களும் விசாகப் பட்டினத்தை தலைநகராக்க துடிக் கின்றனர்.

வரும் தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி பண்டிகை) முதல் விசாகப்பட்டினம் ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட லாம் என்றும் பெரிதும் எதிர்பார்க் கப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று தெனாலியில் நடந்த ஒரு அரசு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளோம் ஆகவே, இம்முறையும் தொடர்ந்து நாங்களே ஆட்சி அமைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வரும் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் தனித்தனியாக 175 தொகுதிகளிலும் போட்டியிட தயாரா? அந்த தைரியம் அவர்களுக்கு உள்ளதா?

எங்கள் ஆட்சி ஏழைகளின் ஆட்சி. ஆனால், சந்திரபாபு நாயுடு பணக்காரர்களுக்காக ஆட்சிக்கு வர துடிக்கிறார். நாங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் 98.5 சதவீத பணிகளை நிறைவேற்றி விட்டோம். சந்திரபாபு நாயுடு ஆட்சியில் வெறும் வறட்சியே நிலவும். ஆனால், நம்முடைய ஆட்சியில் நல்ல மழை பெய்தது. வறட்சியே காணப்படவில்லை. வரும் தேர்தல் ஏழை ஆட்சிக்கும் பணக்கார ஆட்சிக்கும் இடையே நடைபெற உள்ள ஒரு போர். இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.