நாளை தொடங்குகிறது பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: டெல்லி அணி கேப்டனாக மெக் லானிங் நியமனம்

புதுடெல்லி,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நாளை (சனிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. நவிமும்பையில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக 5 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டன் மெக் லானிங் நேற்று நியமிக்கப்பட்டார். துணைகேப்டனாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இதன் மூலம் பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான அணிக்கு தலைமை தாங்கும் 3-வது ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை மெக் லானிங் பெற்றுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெத் மூனி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கும், அலிசா ஹீலி உ.பி.வாரியர்சுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் மும்பை இந்தியன்சையும், ஸ்மிர்தி மந்தனா பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும் வழிநடத்த உள்ளனர்.

மெக் லானிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 4 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது. 100 இருபது ஓவர் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக பணியாற்றி சாதனை படைத்து இருக்கும் மெக் லானிங், மொத்தத்தில் 132 இருபது ஓவர் போட்டியில் ஆடி 2 சதம், 15 அரைசதம் உள்பட 3,405 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (5-ந் தேதி) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

கேப்டனாக நியமிக்கப்பட்ட 30 வயதான மெக் லானிங் கூறுகையில், ‘டெல்லி கேப்பிட்டல்ஸ் போன்ற அணியில் இடம் பிடித்ததும், அதற்கு தலைமை தாங்குவதும் பெருமைக்குரிய விஷயமாகும். அணியை ஒருங்கிணைப்பதும், அணியில் உள்ள ஒவ்வொருவர் குறித்து அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும். இனி உற்சாகமாக விளையாடுவதிலும், நமது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும் தான் எல்லாம் இருக்கிறது. இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் மிகப்பெரிய ஒரு தருணமாகும். இந்தியாவை பொறுத்தமட்டில் கிரிக்கெட் ஆட்டம் மக்களின் உணர்வுடன் கலந்த ஒன்றாகும். இந்த போட்டி வருங்காலங்களில் நல்ல வளர்ச்சி அடையும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.