நாகாலாந்து சட்டமன்றத்தில் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கும் பெண் எம்.எல்.ஏ.க்கள்… 60ஆண்டுகளில் மிக பெரிய திருப்பம்

நாகலாந்து,

நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் இம்முறை 183 வேட்பாளர்களில் 4 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியது, தேர்தல் களத்தை சுவாரஸ்யமாக்கியிருந்தது. இந்த முறையாவது முதல் பெண் எம்.எல்.ஏ சட்டமன்றத்திற்கு காலடி எடுத்து வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு தான் இதற்கு காரணமாகியிருந்தது.

இத்தனைக்கும் இங்கு ஆண் வாக்களர்களை விட பெண் வாக்களர்களே அதிகம். சுமார் ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 143 பெண் வாக்காளர்களை கொண்ட நாகலாந்தில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க ஒரு பெண் எம்.எல்.ஏ கூட இல்லாதது வருத்தத்திற்குரிய நிகழ்வாகவே தொடர்ந்தது.

பூர்வ பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான நாகலாந்தில், ஆணாதிக்க வட்டத்திற்குள் பெண்களின் உரிமைகள் சுருக்கப்பட்டதே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி கொண்ட நாகலாந்தில் முதல் முறையாக மக்களவைக்கு ரானோ எம். ஷாய்ஷா , கடந்த 1977ஆம் ஆண்டு தேர்வாகியிருந்தார்.

கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் முதல் முறையாக பாங்னான் கொன்யாக் நியமிக்கப்பட்டிருந்தார். இப்படி இரண்டு பெண் எம்பிக்களை கண்ட நாகலாந்தில், ஏனோ பெண் எம்.எல்.ஏக்களின் உதயம் மட்டும் மாநிலம் உருவாகிய ஆண்டான 1963ல் இருந்தே கைகூடவில்லை.

இந்நிலையில், இம்முறை காங்கிரஸ் சார்பில் ஒரு பெண் வேட்பாளரும்… தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் இரண்டு பெண் வேட்பாளர்களும்… பாஜக சார்பில் ஒரு பெண் வேட்பாளரும் களத்தில் இறக்கப்பட்டிருந்தனர். இதனால் இம்முறை நாகலாந்து பெண்களின் குரலாக சட்டமன்றத்தில் பெண் எம்.எல்.ஏக்களின் குரல்கள் ஒலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

அதன்படி, முதல் முறையாக நாகாலாந்தில் இருந்து இரண்டு பெண்கள் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளனர். தீமாப்பூர்-3 தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் ஹெகானி ஜக்காலு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோக் ஜன்சக்தி கட்சி வேட்பாளரை காட்டிலும் ஆயிரத்து 536 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதே போல், மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் சல்ஹொடியூனோ குரூஸ் என்ற பெண் வேட்பாளரும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரை காட்டிலும் 41 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றிலேயே முதல் முறையாக இரு பெண் எம்.எல்.ஏக்கள் நாகலாந்து சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.