இரு நாடுகளுக்குள்ள உறவு குறித்து ஆஸி. அமைச்சர் தெரிவித்த தகவலை பகிர்ந்த பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சிறந்த கலாச்சார உறவு குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் கூறிய தகவலை, ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் டான் பேர்ரல் மற்றும் உயரதிகாரிகள் குழு வந்திருந்தது. பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாக உள்ள கலாச்சார தொடர்பு குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் டான் பேர்ரல், பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலிய பிரதமர் எனது நண்பர் அல்பனீஸ் மற்றும் அமைச்சர் டான் பேர்ரல் குழுவினருக்கு மதிய விருந்தளித்தேன். அப்போது டான் பேர்ரல் என்னிடம் சுவாரசியமான ஒரு விஷயத்தை கூறினார். ஆஸ்திரேலியாவில் டான் பேர்ரல், கிரேட் – 1 படிக்கும் போது அவருக்கு ஆசிரியை எபெர்ட் என்பவர் கல்வி கற்று தந்துள்ளார். அவரிடம் பயின்றது தனது கல்வி பயணத்திலும் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் டான் என்னிடம் கூறினார். வாழ்க்கையில் சிறப்பாக வந்ததற்கு ஆசிரியை எபெர்ட்டுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று டான் கூறினார்.

மிகவும் மகிழ்ச்சி அந்த ஆசிரியை எபெர்ட் யார்? அவர் இந்தியாவின் கோவாவைச் சேர்ந்தவர். கடந்த 1950-ம் ஆண்டு தனது கணவர், மகளுடன் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் குடியேறியுள்ளார் எபெர்ட். அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்து பணியாற்றி உள்ளார். எபெர்ட்டின் மகள் லியோனி தெற்கு ஆஸ்திரேலிய ஆசிரியர்கள் நிறுவனத்தின் தலைவராகவே உயர்ந்துள்ளார். இந்த விவரங்களை எல்லாம் டான் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது இந்தியாவுக்கும் – ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள நீண்ட கால கலாச்சார உறவை எடுத்துக்காட்டுகிறது. இதுபோல் தனது ஆசிரியரைப் பற்றி ஒருவர் உணர்வுப்பூர்வமாக நம்மிடம் கூறும் போது அதை கேட்பதற்கே ஆனந்தமாக உள்ளது. இவ்வாறு ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.