”கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?” – அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்லும் அரிய தகவல்கள்

கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை மத்திய தொல்லியல்த்துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார்.
அவரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் பாலவெற்றிவேல் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்..
தொல்லியல் மீதான ஒரு விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதுமே பெருகி இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக தான் தொல்லியல் துறை சார்பாக ஆய்வினை தமிழ்நாடு முழுதும் மயிலாடும் பாறையில் ஆரம்பித்து நிறைய இடங்களில் நடந்து வருகிறது. இந்திய தொல்லியல் துறையை பொருத்த வரையில் தமிழ்நாட்டின் கவனம் எப்படி இருக்கிறது?
இந்தியத் தொல்லியல் துறையும் தமிழகத் தொல்லியல் துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். எனது சென்னை குழுவினர் வடக்கம் பட்டு என்ற இடத்தில் அகழாய்வு மேற்கொள்கிறார்கள். திருச்சி குழுவினர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொள்கிறார்கள். இது போல் இந்திய , தமிழக தொல்லியல் துறை இணைந்து ஆராய்ச்சியை மேற்கொண்டால் தான் பல இடங்களை நாம் கண்டு பிடிக்க முடியும். அதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். பல புதிய இடங்கள் அடையாளம் காணப்படும். புதிய இடங்களில் கிடைக்கும் செய்திகள் பல மாற்றங்களை கொண்டுவரக்கூடும்.
வைகை நதி ஓரம் நூற்றுக்கும் மேற்பட்ட அகழ் ஆய்வு பண்ணக்கூடிய இடங்கள் இருப்பதாக நீங்கள் கூறி இருக்கிறீர்கள். அதில் கீழடியும் ஒரு இடமாக இருக்கிறது. வைகை நதி நாகரீகத்தில் தொல்லியல் துறையின் முக்கியத்துவம் என்ன?
சங்க இலக்கியங்களால் புகழப்பட்ட நதி வைகை நதி, அதே போல் சங்கத்தை வளர்த்த ஒரு இடம் என்றால் அது மதுரை தான். அந்த மதுரையைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளும் இடமாக தான் கீழடியானது இருக்கிறது.
அகழ்வாராய்சியின் போது கிடைத்த எலும்புகளை DNA சோதனை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதன் தரவுகள் வரும் பட்சத்தில், முக்கியமான செய்தி ஏதேனும் வெளிவர வாய்ப்பு இருக்கிறதா?
DNA டெஸ்ட் மூலம் மக்கள் எந்த எந்தபகுதியில் வாழ்ந்தவர்கள் என்ற தகவல்கள் தெரிய வரும். தொல்லியலை பொருத்த வரையில் ஒரு வாழ்விடப்பகுதியை ஆய்வு மேற்கொண்டால், அங்கிருக்கும் புதைப்பிடத்தையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு செய்யப்படவில்லை. அவ்வாறு ஆய்வு செய்தால் தான் அவர்களைப்பற்றிய முழு தகவல்கள் நமக்கு தெரியவரும்.
வைகை நதியின் தெற்கே இருக்கும் புரனை நதி இதற்கு இடைப்பட்ட பகுதிகளான ஆதிச்சநல்லூரில் ஆரம்பித்து கீழடி வரையிலும் மொத்த பகுதியும் 2100 வருடங்களாக உயிர்ப்புடன் இருப்பதாக உங்களின் ஆய்வு சொல்கிறது. இதில் என்ன மாதிரியான விஷயங்களை அது உணர்த்துகிறது?
நாம் இன்னும் சங்க காலத்தை பற்றி ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும் என்ற தகவல்களை தான் அது நமக்கு உணர்த்துகிறது. இப்பகுதிகள் மட்டும் அல்லாது வடபகுதி கேரளம் ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்தல் வேண்டும். அப்பொழுது தான் நமக்கான புரிதல் கிடைக்கும்.
கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?
கண்டிப்பாக கடல் பகுதிகளில் நாம் ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும். இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அதற்கான வல்லுநர்கள் நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை. அதை நாம் கண்டிப்பாக செய்யும் பொழுது தான் பூம்புகார், கொற்கை போன்ற இடங்களை எவ்வாறு கடல் கொள்ளப்பட்டது என்பது தெரிய வரும். இனி வரும் அரசுகள் இதற்கு ஆதரவு தந்து இவ் ஆய்வினை மேற்கொள்ள ஆவண செய்தல் வேண்டும்
நேர்காணலைப் பார்க்க, கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்க
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.