தஞ்சை மாணவனை தூக்கிய பிரதமரின் சிறப்பு அதிகாரிகள்; நடந்தது என்ன.?

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா.தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். 35 வயதான விக்டர் ஜேம்ஸ் ராஜா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை, தனது தந்தையின் மெயில் ஐடியில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த இ-மெயில்கள் எங்கிருந்து வந்தது என்று டெல்லியில் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவை தஞ்சை மாவட்டம் பூண்டியிலிருந்து வந்ததாக தெரியவந்ததை அடுத்து டெல்லியிலிருந்து 10 பேர் அடங்கிய சிறப்பு அதிகாரிகள் தஞ்சைக்கு விரைந்து வந்தனர்.

இந்நிலையில் விக்டர் ஜேம்ஸ் ராஜா நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விக்டரிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு விசாரணை செய்தனர்.

விசாரணைக்கு பிறகு தங்களிடம் எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் தனது மகனை அழைத்துச் சென்று விட்டதாக தெரிவிக்கும் பெற்றோர் எதற்காக அழைத்துச் செல்கிறோம், ஏன் அழைத்து செல்கிறோம் என்ற கேள்விக்கு முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து தங்களது மகனிடம் கேட்டபோது தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை பயப்பட வேண்டாம் என மட்டுமே கூறியதாகவும் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

தஞ்சையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் வைத்து இரண்டாம் நாளாக விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிறப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் போது சிறப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசார் யாரையும் நெருங்க விடவில்லை என கூறப்படுகிறது. தங்களது மகனை மீட்டு தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.