நீலகிரி: திருவிழா கடைகளை அகற்ற தாமதமென பழங்குடிகளைத் தாக்கினார்களா வனத்துறையினர்?!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சிறியூர் வனப்பகுதியில் சிறப்பு வாய்ந்த சிறியூர் மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆண்டுத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறியூர் அம்மனை வழிபட்டுச் செல்வார்கள் .‌ பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளிலுள்ள சிறு, குறு வணிகர்கள் இந்தப் பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து விழா முடியும் வரை வணிகத்தை மேற்கொள்வது வழக்கம்.

பழங்குடிகள்

புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதி என்பதால் வனத்துறையால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

அதைத் தொடர்ந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த வணிகர்கள் பலரும் தாங்கள் அமைத்திருந்த தற்காலிக கடைகளை அகற்றிக் கொண்டு, சிறியூரைவிட்டு வெளியே வந்திருக்கின்றனர். அப்போது திடீரென இவர்களின் வாகனங்களை வழிமறித்த வனத்துறையினர் சிலர், கடைகளை அகற்ற ஏன் இவ்வளவு தாமதம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பழங்குடியினரும் தங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்லியிருக்கின்றனர். இதில் ஆத்திரமடைந்த வனத்துறை பணியாளர்கள் சிலர், தங்களைத் தாக்கியதாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட இருபதுக்கும் அதிகமானோர் புகார் தெரிவித்திருக்கின்றனர். மேலும், வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள வனத்துறை சோதனைச் சாவடியையும் முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழங்குடியினர்

உரிய விசாரணை நடத்தப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.‌ இந்த நிலையில், வனத்துறையினர் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியின இளைஞர்கள் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய பழங்குடியினர், “பல ஆண்டுகளாக திருவிழா சமயங்களில் நாங்கள் குடும்பமாக இங்கு வந்து கடைகளைப் போட்டு வருகிறோம். இந்த முறை கடைகளை காலி செய்துவிட்டு வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது, தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லி வனத்துறையினர் தாக்கினார்கள். பெண்கள் என்றுகூட பார்க்காமல் தாக்கினார்கள். எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடமாட்டோம்” என்றனர்.

பழங்குடியினர்

இது தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகளிடம் பேசினோம். “இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பழங்குடியினரை வனத்துறை பணியாளர்கள் தாக்கியது உறுதி செய்யப்பட்டால், பாரட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.