இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடங்களை கட்டும் பொதுப்பணித் துறை: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: “பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இயற்கை சீற்றங்களான பூகம்பம், புயல் மற்றும் சுனாமி போன்றவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் தரம் மற்றும் உறுதித்தன்மையுடன் கட்டப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் பயிற்சி முகாமை பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் பேசுகையில், “முதல்வரின் அறிவுரையின்படி, பலநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு, இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல கட்டடங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பொதுப்பணித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இயற்கை சீற்றங்களான பூகம்பம், புயல் மற்றும் சுனாமி போன்றவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் தரம் மற்றும் உறுதித்தன்மையுடன் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானம் AEC என்னும் மூன்று அங்கங்களைக் கொண்டது. அதாவது A-ஆர்க்கிடெக்ட்ஸ், E-இன்ஜினியர்ஸ், C-கான்ட்ராக்டர்ஸ். இந்த மூன்று அங்கங்களும், ஒன்றுடன் ஒன்று இணைந்து பணிபுரிந்தால், கட்டுமானங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியும்.

வீடு, நிர்வாக அலுவலகம், தொழிற்சாலை போன்ற எந்த வகைக் கட்டடங்களாக இருந்தாலும், அவை பொது மக்களின் நீண்ட நாள் பயன்பாட்டிற்கு நிலைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு கட்டுமானத்தின் வெற்றி என்பது, அக்கட்டுமானம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தினை நிறைவேற்றுவதாக அமைவதைப் பொறுத்ததாகும்.

இதற்காக அத்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடி, தேவைகளை அறிந்து, அவற்றைத் தற்கால தொழில் நுட்பங்களுடன் இணைத்து, கட்டுமானங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் கட்டுமானங்களில் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்துவதில், ஆர்வமுடன் செயல்பட்டாக வேண்டும். உங்கள் ஒவ்வொருக்கும் இத்தகைய ஆர்வம் மிகவும் அவசியம்.

தற்போது பொதுப்பணித் துறையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், பீம் (Beam), சிலாப் (Slab), காலம் (Column) என்ற முறையில் பணித்தளத்திலேயே அதாவது onsite-ல் மேற்கொள்ளப்படுகிறது. ஊட்டி போன்ற மலைப்பகுதிகளிலும் தற்போது இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. மலைப் பகுதிகளில் தரைதளம், முதல்தளம் என்ற அளவிலேயே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. இதுபோன்ற இடங்களில், கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல மிகுந்த நேரம் தேவைப்படுகிறது. அதனால் இவ்விடங்களில் பிரீபேவ் டெக்னாலஜி (Prefab Technology) மூலம் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.