பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு ஒருசேர சீர்கொண்டுபோன இந்து – கிறிஸ்தவ – முஸ்லீம்கள்!

மதங்களைக் கடந்து மனித நேயத்தை உணர்த்தும் வகையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து – கிறிஸ்தவம் – முஸ்லிம் என மும்மதத்தினரும் தங்களது மத குருமார்கள் தலைமையில் ஒரு சேர மத நல்லிணக்க சீர் கொண்டு வந்தது காண்போர்களை நெகிழ வைத்தது.
எம்மதமும் சம்மதமே என்றிருந்தால்..
எம்மதமும் சம்மதம் என்பதை மறந்து தம்மதமே பெரிதென நினைக்கும் போது தான் சில விபரீதங்கள் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் மதம் சார்ந்த பிரச்சனைகள் தலை தூக்க தொடங்கினாலும் தமிழகத்தில் புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்துக்களின் கோயில் திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வருவதும் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர் கொண்டு செல்வதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
image
இதற்கெல்லாம் மகுடமாக, இன்று புதுக்கோட்டை காமராஜபுரம் 9 ஆம் வீதியில் அமைந்துள்ள 47 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஸ்ஜித் முஹம்மது இப்ராஹீம் ஜூம்ஆ பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு ஜும்ஆ பள்ளிவாசலின் திறப்பு நடைபெற்றது.
பள்ளிவாசல் திறப்புக்காக ஒன்றிணைந்த மும்மதத்தினர்!
இந்த விழாவில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி, இந்து பட்டாச்சியர், இஸ்லாமிய ஹசரத் உள்ளிட்ட மத குருமார்கள் தலைமையில் ஜாதி மத சமூக பாகுபாடுகளை கடந்து அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து பள்ளிவாசலுக்கு அனைத்து பழங்கள் அடங்கிய தட்டுகளை கையில் ஏந்திய படி மதநல்லிணக்க சீர் கொண்டு செல்கின்றனர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
image
மதங்கள் வேறாக இருந்தாலும் மனிதம் ஒன்றுதான்
இதுகுறித்து சீர் கொண்டு சென்ற அம்மக்கள் கூறுகையில், “மதங்கள் வேறாக இருந்தாலும் மனிதம் ஒன்றுதான். காமராஜபுரத்தைப் பொறுத்தவரையில் காலம் காலமாக இந்து – முஸ்லிம் – கிறிஸ்தவம் என அனைத்து மதத்தின் மக்களும் மத பாகுபாடு இன்றி சமத்துவத்தோடு வாழ்ந்து வருகிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக தான் இன்று இந்நிகழ்வு நடந்துள்ளது. நாங்கள் வெவ்வேறு மதமாக இருந்தாலும், எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை.

அனைவரும் சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற நோக்கில் இன்று இந்த மத நல்லிணக்க சீர் கொண்டு செல்லும் விழா நடைபெற்றது. இதே போல் நாடு முழுவதும் மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்பட்டால், எந்த விதமான மத மோதல்களும் ஏற்படாது” என்றனர்.
இதேபோல் அருகே உள்ள ஓம் சக்தி கோயிலில் இருந்தும் பள்ளிவாசலுக்கு இந்து மக்கள் பழம் – இனிப்பு உள்ளிட்டவற்றை தட்டில் ஏந்தி சீர் கொண்டு சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.