தனி ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தார் விவேகானந்தர் மண்டபத்தில் ஜனாதிபதி முர்மு தியானம்: கவர்னர், அமைச்சர் வரவேற்றனர்

நாகர்கோவில்: ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை தனி ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தார். நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்ற அவர், அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில், நேற்று காலை 8.55 மணிக்கு கன்னியாகுமரி வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், டிஜிபி சைலேந்திரபாபு, பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதிநிர்மலா, மாவட்ட கலெக்டர் தர், விஜய் வசந்த் எம்பி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பூம்புகார் படகு தளத்துக்கு அவர் காரில் சென்றார்.

அங்கிருந்து தனி படகில், நடுக்கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். அங்கு  பகவதியம்மன் பாத மண்டபத்துக்கு சென்ற ஜனாதிபதி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் சபா மண்டபத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் படத்துக்கும், அன்னை சாரதாதேவி படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

7 அடி உயர விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், தியான மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். மண்டபத்தின் வெளியே நின்றவாறு, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். காலை 9.50க்கு அங்கிருந்து  புறப்பட்டார். பின்னர் விவேகா னந்தா  கேந்திரா வளாகத்தில் உள்ள பாரத மாதா கோயிலுக்கு சென்றார். கேந்திரா நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். பாரத மாதா கோயிலில் தரிசனம் செய்தபின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில்  ஹெலிபேடு தளத்துக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 10.55 மணிக்கு, திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

* ஆன்மிகத்தின் சின்னமாக திகழ்கிறது
விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்த பார்வையாளர் புத்தகத்தில், விவேகானந்தர் பாறை நினைவிடத்துக்கு சென்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். ஆன்மிகத்தின் சின்னமாக விளங்கும் இந்த வளாகத்தை கட்டுவதற்கு பின்னால் இருந்த மறைந்த ஏக்நாத் ரானடேஜியின் மகத்துவத்தை கண்டு வியக்கிறேன். விவேகானந்தரின் மகத்தான பணியை இந்த இடத்தில் உணரும் பாக்கியத்தை பெற்றேன். விவேகானந்தா கேந்திரத்தின் செயல்பாடுகள் மூலம் சுவாமிஜியின், செய்தியை பரப்பும் மக்களின் பக்தியை பாராட்டுகிறேன் என எழுதி இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.