“திமுகவில் விரைவில் உட்கட்சி பிரச்னை வெடிக்கும்; நாம் வேடிக்கை பார்ப்போம்” – நடிகை விந்தியா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆண்டாள் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நடிகை விந்தியா சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். தொடர்ந்து அவர், ஆண்டாளை தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசுகையில், “கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் என்பது நம்பிக்கை. அந்தவகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என வேண்டிக்கொண்டு பழனிக்கு நேற்று சென்று சாமி தரிசனம் செய்தேன்.

தரிசனம்

சாமியிடம் வேண்டியதன் பயனாக கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என நேற்றே அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். அ.தி.மு.க. குடும்பக்கட்சி கிடையாது. இது மாபெரும் இயக்கம். ஒன்றரை கோடி தொண்டர்கள் குடும்பமாக வாழ்கின்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வருகிறார் என்றால் அவருடைய விசுவாசம், கடுமையான உழைப்பு, அவருடைய துணிச்சல், அவருடைய நேர்மைதான் காரணம். தமிழ்நாட்டு மக்களை திருட்டு தி.மு.க.விடமிருந்து காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைப்பவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு துணையாக இருந்து அவரை வெற்றிப்பெற வைத்து மக்களை காக்கவும், சீக்கிரம் அ.தி.மு.க.ஆட்சியை கொடுக்கவேண்டும் என்று நான் ஆண்டாளை வேண்டி தரிசனம் செய்துவந்துள்ளேன்.

தி.மு.க.ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கோயில் வாசலில் இருந்து கோர்ட்டு வாசல்வரை கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கை தி.மு.க. ஆட்சியில் நாம் எதிர்பார்க்க முடியாது. தி.மு.க. ஆட்சியில் அவர்கள் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாட்டார்கள். மக்களுக்கான ஆட்சியை தி.மு.க.நடத்தாது. அவர்களுக்கு ஆட்சி நடத்தவும் தெரியாது.

ஆண்டாள் கோயில்

தி.மு.க.வினர் ஆட்சி நடத்துவது போல் காட்சி மட்டுமே நடத்துவார்கள். விளம்பரத்தை கொடுப்பார்கள். மக்களுக்காக எதுவுமே செய்யாத ஆட்சி தி.மு.க.வினுடையது. ஒரு செய்தி வந்தால், அதை திசைத்திருப்புவதற்காக வேறு ஒருபிரச்னையை தி.மு‌.க. கிளப்புகிறது. பொய் வழக்கு போடுவது, வருமானவரி சோதனை நடத்துவது என்று மக்களை திசைத்திருப்புவார்கள். தி.மு.க.வை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் அவர்களுக்குள்ளே ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளது. விரைவில் தி.மு.க.வில் உட்கட்சி பிரச்னை வெடிக்கப்போகிறதை நாம் வேடிக்கை பார்க்க போகிறோம்.

நடிகை விந்தியா

அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கூற முடியாது. அவர்களது தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை கூட்டணி இருக்கிறது. தற்போது எந்த தேர்தலும் கிடையாது. பெரிய தேர்தல் வரும்போது தலைவர்கள் கூட்டணி பற்றி முடிவு எடுப்பார்கள். அப்போது பார்த்துக்கொள்ளலாம். ஓ.பி.எஸ்.க்கு நிறைய நேரம் இருக்கிறது. அவர் யாரை வேண்டுமானாலும் சந்திப்பார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.