தி.மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட ஷூட்டிங் – பொது மக்களுக்கு இடையூறு செய்த பவுன்சர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பின்போது பொதுமக்களின் செல்போன்களை பறித்து பவுன்சர்கள் அடாவடியில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் இன்று 18-ம் தேதி) படமாக்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர். இவர்களது பாதுகாப்புகாக பவுன்சர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டன. இணை சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்த பெட்டிக் கடைகள் அகற்றப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு பொதுமக்கள் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர்.

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என வைக்கப்பட்டுள்ளது

இதையறிந்த பவுன்சர்கள், மக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை டெலிட் செய்து அடாவடியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது, மீறினால் செல்போன்களை பறிமுதல் செய்வோம் என ‘உள்ளூர் இடைத் தரகர்கள்’ மூலம் மிரட்டல் விடுத்தனர். பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தினால், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத்தான் செய்வோம், உள் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்தனர்.

கயிறு கட்டி சிறைபிடிப்பு: இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலக நுழைவு பாதையில், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, யாரும் செல்ல முடியாத வகையில் மக்களை பவுன்சர்கள் சிறைபிடித்தனர். இதனால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விடுதிகளுக்கு செல்ல முடியாமல் மாணவிகள் தவித்தனர். இதேபோல், வட்டாட்சியர் அலுவலகம், இ-சேவை மையத்தை தேடி வந்த மக்களும், ஊழியர்களும் அவதிப்பட்டனர்.

இந்தப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, வட்டாட்சியர் அலுவலக கதவுகளை மூட முயன்றதால், உழவர் சந்தைக்கு சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.

படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறி, வட்டாட்சியர் அலுவலக வளாக நுழைவு பாதையில் கயிற்றை கட்டி, மக்களை சிறைபிடித்த பவுன்சர்கள்

பொதுமக்களுக்கு இடையூறு: இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 3 பள்ளி மற்றும் கல்லூரி மாணவி விடுதிகள், இணை சார் பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கிளைச் சிறை, சிறார் நீதிக்குழுமம் ஆகியவை இயங்குகிறது. அடிப்படை தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள், தினசரி வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் பெற்ற இடத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள், கோயில் விழா மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தும்போது, மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், படப்பிடிப்பு என்ற பெயரில் வட்டாட்சியர் அலுவலக வளாகம் உள்ளே மக்களை செல்லவிடாமல் கயிறு கட்டி தடுப்பது, புகைப்படம் எடுக்கும் மக்களின் செல்போன்களை பவுன்சர்கள் பறிப்பது என்பது சட்ட விதிகளை மீறிய செயலாகும்.

வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகையை திடீரென மாற்றியதால், பணியில் இருந்த அதிகாரிகளை தேடி வந்த மக்கள் குழப்பமடைந்தனர். மக்களின் வாழ்வாதாரமாக உள்ள வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தவிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் மந்தாகினிக்கு ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.