பிக்பாக்கெட் அடிப்பது போல் ஒரு பொதுச் செயலாளர் தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

திருச்சியில் ஏப்ரல் 2 வது வாரத்தில் மாநிலம் தழுவிய மாநாடு நடைபெறும் என்றும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘அதிமுகவில் பொதுவாக கழக அமைப்பு ரீதியாக  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பது வழக்கம். அதற்கு உறுப்பினர் அட்டை, படிவம் உள்ளிட்டவை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் எந்த விதியும் முறையாக பின்பற்றப்படாமல், பிக் பாக்கெட் அடிப்பது போல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் பொதுக்குழு கூட்டத்தை அங்கீகரிக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தால்,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்கள்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி,  எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு.

அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், அதிமுக சட்டவிதிகளை மாற்றி தன்னுடன் இருப்பவர்களுக்கு பதவி கிடைத்தால் போது என்று எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். அதிமுகவை மீட்டெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம், அதுதான் எங்களுடைய இலக்கு.

சர்வாதிகாரியாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கிறார். அவர், நாசகார சக்தியாக இருக்கிறார். அண்ணாவும், எம்ஜிஆரும் சகோதர உணர்வுடன் கட்சியை வளர்த்தார். தாயன்புடன் ஜெயலலிதா கட்சியை வளர்த்தார். 

தமிழகத்திற்கு எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது. எங்களை கட்சியை விட்டு நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஐந்து ஆண்டுகளில் காலாவதி ஆகிவிடும்.

ஏப்ரல் மாதம் 2 வது வாரத்தில் திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்தப்படும். அதன்பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.

கொடநாடு கொலை வழக்கில் இன்னும் பல பூதாகரங்கள் வெடிக்கும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மனநிலையாக இருக்கிறது’ என்றார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.