ரொம்ப சந்தோசம்… அண்ணாமலையின் கூட்டணி முடிவை ஏற்றது அதிமுக..! டெல்லிக்கு டென்ஷன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்த அண்ணாமலை சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காமல் விலகினார். அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில் அண்ணாமலை இலங்கைக்கு சென்றுவிட்டார்.

மேலும், பாராளுமன்ற தேர்தலை உற்றுநோக்கி இருக்கும் அண்ணாமலை இடைத்தேர்தலில் வேறு வழியில்லாமல்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார். ஆனாலும், அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என அடுத்தடுத்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர்.

இதனால் கொதித்துப்போன அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேச தொடங்கினார். அதிமுகவில் இருந்து ஆட்களை நான் வேட்டையாட நினைத்தால் என்னிடம் பெரிய லிஸ்ட் இருக்கும் என்று எச்சரிக்கையம் விடுத்தார். இந்த மோதல் போக்கு இரு கட்சிகளின் தலைவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது. ஆனால், டெல்லி மேலிடமோ அதிமுகவுடன் சுமூகமாக நடந்துகொள்ள அண்ணாமலைக்கு அறிவுறுத்தியது. இதை அண்ணாமலை விரும்பவில்லை.

இந்த நிலையில், சென்னையில் நேற்று நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த கூட்டத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி ஆகியோரும் இருந்துள்ளனர். அனைவரும் கட்சி சார்ந்த ஆலோசனைகளை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அண்ணாமலை, தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்றும் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நாராயணன் திருப்பதி, எம்எல்ஏ வானதி ஆகியோர் இடையிட்டு, இது இங்கு பேச வேண்டிய விஷயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கூட்டத்தில் அண்ணாமலையின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி பாஜக நிர்வாகிகளுக்குள்ளேயே சலசலப்பானது.

இந்த நிலையில் அண்ணாமலையின் முடிவுக்கு பாஜக – அதிமுக தரப்பில் இருந்து கருத்துக்கள் வர தொடங்கியுள்ளன. அதிமுக அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராம் கூறியபோது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்ற அண்ணாமலையின் கருத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என்றார். அதேபோல, அதிமுக உடனான கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.