பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது – இன்று நண்பகல் வரை இணைய தள சேவைகள் முடக்கம்

ஜலந்தர்: பஞ்சாபில் பிரிவினைவாத தலைவரும் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், பஞ்சாபில் இதற்கான முன்னெடுப்பை தீவிரமாக செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த மாதம் இவரது உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் புறநகர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது உதவியாளர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை ஜலந்தர் மாவட்டம் மெகத்பூர் பகுதியில் பஞ்சாப் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

முன்னதாக, ஜலந்தரில் அவரை போலீஸார் கைது செய்ய முயன்றனர். ஆனால் இத்தகவலை முன்கூட்டியே அறிந்த அம்ரித்பால் சிங் ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றார். அவரை போலீஸார் விரட்டிச் சென்று மெகத்பூர் பகுதியில் கைது செய்தனர்.

எந்த வழக்கில் கீழ் அம்ரித்பால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தை போலீஸ் அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. எனினும் முகத்சர் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதஊர்வலத்தை தொடங்க இருப்பதாக அம்ரித் பால் சிங் அறிவித்திருந்த நிலையில், அதற்கு முதல் நாள் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாபில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணி வரை இணையதள சேவையை போலீஸார் முடக்கியுள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், புரளிகளை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.