ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமான விவகாரம்: 4 ஆண்டுகளாக சிறுக சிறுக திருடிய பெண்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவர் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஈஸ்வரிதான் சிறுக சிறுக நகையை திருடி விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருப்பதாக இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்தார். தனது புகாரில் அவர் “எங்கள் வீட்டிலிருந்த வைர நகைகள், பழங்கால தங்க நகைகள், நவரத்தின நகைகள், தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வைர நகைகள், ஆரம், நெக்லஸ் உள்பட சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளது. மொத்தம் 3 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போயிருக்கிறது.

image

கடந்த 2019-ம் ஆண்டு எனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு நகைகளை பயன்படுத்திய பின்னர், நகைகளை லாக்கரில் வைத்திருந்தோம். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை, அது செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள எனது குடியிருப்பில் இருந்தது; பின்னர் அது சி.ஐ.டி. காலனியில் நடிகர் தனுஷுடன், நான் பகிர்ந்து கொண்ட குடியிருப்புக்கு மாற்றப்பட்டது; மீண்டும் செப்டம்பர் 2021-ல் செயின்ட் மேரிஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து கடைசியாக நகைகள் அடங்கிய லாக்கர் கடந்த ஏப்ரல் 9, 2022 அன்று எனது தந்தை நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது.

image

லாக்கரின் சாவிகள் செயின்ட் மேரிஸ் சாலை குடியிருப்பில் உள்ள எனது தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன. இது எனது பணியாளர்களுக்குத் தெரியும். நான் இல்லாதபோது அவர்களும் அடிக்கடி அபார்ட்மெண்டிற்கு செல்வார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி நான் லாக்கரைச் சரிபார்த்தபோது, கடந்த 18 ஆண்டுகளில் நான் சேமித்துவைத்திருந்த நகைகள் அனைத்தும் (மேற்கூறிய நகைகள்) காணாமல் போனது எனக்கு தெரியவந்தது” என கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, இது தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரியும் 3 பேரிடம் விசாரணை செய்தனர். இதில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் தேனாம்பேட்டை போலீசார் எம்.ஜி.ஆர். காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் 2019-ம் ஆண்டில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகளை சிறுக சிறுக எடுத்து விற்பனை செய்து பணமாக மாற்றி உள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.